பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியக் கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து முப்படை பயிற்சியை நடத்துகிறது
Posted On:
02 NOV 2025 4:00PM by PIB Chennai
இந்தியக் கடற்படை தலைமையில், இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையுடன் இணைந்து நடத்தப்படும் முப்படைகளின் பயிற்சி “திரிசூல்” (Trishul), 2025 நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய கடற்படையின் மேற்கு மண்டல கட்டுப்பாட்டு பிரிவு சார்பில், மூன்று படைகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் வடக்கு அரபிக் கடலில் நீர்நிலைப் படை நடவடிக்கைகளையும் (amphibious operations) உள்ளடக்கிய விரிவான கடல்சார் நடவடிக்கைகள் (maritime operations) இடம்பெறும். அத்துடன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் ஓடை மற்றும் பாலைவனப் பகுதிகளில் பெரிய அளவிலான செயல்பாடுகளும் இடம்பெறும்.
குஜராத் கடற்கரை மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் இந்தப் பயிற்சியில், இந்திய ராணுவத்தின் தெற்கு கட்டுப்பாடடு பகுதி , கடற்படையின் மேற்கு கட்டுப்பாட்டு பிரிவு, விமானப்படையின் தென்மேற்கு பகுதி ஆகியவை முதன்மை பிரிவுகளாகப் பங்கேற்கின்றன. மேலும், இந்தியக் கடலோரக் காவல்படை , எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பிற மத்திய படையினரும் பெருமளவில் பங்கேற்று, பல்வேறு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளையும் வலுப்படுத்தவுள்ளன.
பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்
இந்தப் பயிற்சியானது, முப்படைகளுக்கும் இடையேயான செயல்பாட்டு நடைமுறைகளின் சரிபார்ப்பு மற்றும் ஒத்திசைவை அடைவதையும், பல களச் சூழலில் ஒருங்கிணைந்த விளைவு சார்ந்த செயல்பாடுகளை இயக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துதல், படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பல களங்களில் செயல்பாடுகளில் கூட்டுறவை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களில் அடங்கும்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள், இந்திய விமானப்படையின் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய விமானங்கள், அத்துடன் விமான இறங்குதளம், ஐ.என்.எஸ் ஜலஷ்வா மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட இந்திய ராணுவம் மற்றும் கடற்படையின் நீர்நிலைப் படைப்பிரிவுகளின் நடவடிக்கைகள் ஆகியவை இந்தப் பயிற்சியின் ஒரு முக்கியப் பகுதியாகும். இதன் மூலம் அனைத்துப் படைகளுக்கும் இடையேயான ஒத்திசைவை மேம்படுத்துவது மற்றும் ஒரு பெரிய, சிக்கலான செயல்பாட்டுச் சூழலில் பல கள ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைச் சரிபார்ப்பது ஆகியவை பயிற்சியின் மற்றொரு முக்கியக் கவனமாகும்.
இந்தப் பயிற்சியானது, கூட்டு உளவு, கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல், மின்னணு போர் மற்றும் இணையப் போர் திட்டங்களையும் சரிபார்க்கும். மேலும், இது இந்திய விமானப்படையின் கடற்கரை அடிப்படையிலான சொத்துக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்தியக் கடற்படையின் கேரியர் நடவடிக்கைகளையும் உள்ளடக்கும்.
இந்தப் பயிற்சியானது உள்நாட்டு அமைப்புகளின் பயனுள்ள பயன்பாட்டை எடுத்துரைப்பதுடன், ‘ஆத்மநிர்பர் பாரத்’ - சுயசார்பு இந்தியா கொள்கைகளின் உள்வாங்கலை நிரூபிக்கும். அத்துடன், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சமகால மற்றும் எதிர்காலப் போரின் மாறிவரும் தன்மையைக் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் நுட்பங்களைத் துல்லியமாக்குவதிலும் இது கவனம் செலுத்தும்.
“திரிசூல்” பயிற்சியானது, இந்திய ஆயுதப் படைகள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் செயல்படுவதற்கான கூட்டுத் தீர்மானத்தை வலியுறுத்துகிறது. இதன் மூலம் கூட்டுச் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் தேசியப் பாதுகாப்பையும் இந்த பயிற்சி மேலும் மேம்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185528
***
AD/VK/RJ
(Release ID: 2185597)
Visitor Counter : 14