நித்தி ஆயோக்
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவது குறித்த 8-வது பிராந்திய ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
02 NOV 2025 12:43PM by PIB Chennai
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் (NCESS), "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) எளிதாக்குவது" குறித்த 8வது பிராந்திய ஆலோசனைக் கூட்டம் 2025 அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நித்தி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்துவது குறித்து ஆழமாக விவாதிக்க, நிறுவனத் தலைவர்கள், துணை வேந்தர்கள் மற்றும் அறிவியல் அமைச்சகம், துறைகளின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், தேசிய புவி அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பேராசிரியர் என்.வி. சலபதி ராவ் வரவேற்று பேசுகையில், அறிவியல் ஆய்வுக்கான சாதகமான சூழலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், புதுமையால் வழிநடத்தப்படும் வளர்ச்சியில் பிராந்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். நித்தி ஆயோக்கின் பேராசிரியர் விவேக் குமார் சிங், "ROPE கட்டமைப்பு" (Removing Obstacles, Promoting Enablers - தடைகளை நீக்குதல், உதவுபவர்களை ஊக்குவித்தல்) என்ற அணுகுமுறையை அறிமுகப்படுத்தினார். இதுவே ஆராய்ச்சியை எளிதாக்குவது குறித்த நித்தி ஆயோக்கின் முயற்சிக்கு வழிகாட்டியாக அமையும் என்றார். இந்த ROPE கட்டமைப்பானது, ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொள்ளும் நிறுவன மற்றும் கொள்கை அளவிலான சவால்களைக் கண்டறிவதோடு, அறிவியல் முன்னேற்றத்திற்கு உகந்த சூழலை உருவாக்க, நெகிழ்வுத்தன்மை, நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாடு போன்ற ஆதரவு வழிமுறைகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் அவர்கள், ஆராய்ச்சியின் செயல்திறனையும் தாக்கத்தையும் மேம்படுத்துவதற்கான இலக்கு சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார். ஓய்வுபெற்ற அறிவியல் திறமைகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல், பல்கலைக்கழகம்-தொழில் துறை-அரசு (UIG) சூழல் அமைப்பை வலுப்படுத்துதல், தனியாகச் செயல்படுவதற்குப் பதிலாக நிறுவனங்களிடையே தரவுப் பகிர்வை ஊக்குவித்தல் மற்றும் ஆராய்ச்சியின் முடிவுகளைச் சமூகத்துடன் தொடர்புபடுத்தும் வகையில் அறிவியல் தகவல்தொடர்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றை அவர் பரிந்துரைத்தார்.
உள் மற்றும் வெளி காரணிகள்
நித்தி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே. சரஸ்வத், தனது உரையில், ஆராய்ச்சியை எளிதாக்குவது என்பது உள் மற்றும் வெளி காரணிகள் என்ற இரண்டு முக்கிய கூறுகளின் அடிப்படையில் அமைகிறது என்று எடுத்துரைத்தார். உள் காரணிகள் ஆராய்ச்சி நிறுவனங்களின் கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை என்றும், வெளி காரணிகள் ஒழுங்குமுறைத் தடைகள், நிதி வழிமுறைகள் மற்றும் குறுக்குத் துறை ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியவை என்றும் அவர் கூறினார். ஆராய்ச்சி மற்றும் புதுமையில் உலகளாவிய தலைவராக இந்தியா மாறுவதற்கு, இந்த இரண்டு பரிமாணங்களையும் ஒரே நேரத்தில் கையாள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநிலத்தின் பங்கு
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கேரள ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவது" என்பது குடிமக்களுக்கான "வாழும் வசதியை மேம்படுத்துதல்" என்ற பரந்த இலக்குடன் உள்ளார்ந்து இணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அறிவியலும் தொழில்நுட்பமும் மக்களை மையப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கு இணங்க இருக்க வேண்டும் என்றும், நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் அரசாங்கங்களுக்கிடையேயான கூட்டு அணுகுமுறையே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். "மாநிலத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என்று ஆளுநர் கருத்துத் தெரிவித்தார். இதன் மூலம், பிராந்திய அளவில் வேரூன்றிய புதுமைச் சூழல் அமைப்பின் தேவையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் அமர்வுகளுடன் இந்தக் கூட்டமானது நிறைவுற்றது. இதன் மூலம் இந்தியாவில் ஒரு சாதகமான, திறமையான மற்றும் கூட்டு ஆராய்ச்சி & மேம்பாடு சூழல் அமைப்பை உருவாக்க அனைவரும் உறுதி பூண்டனர்.
***
(Release ID: 2185429 )
AD/VK/RJ
(रिलीज़ आईडी: 2185543)
आगंतुक पटल : 29