குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சமுதாயத்திற்கு ஆற்றலளிக்கும் நூலகங்கள் குறித்த சர்வதேச மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்
Posted On:
02 NOV 2025 1:28PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், "சமுதாயத்திற்கு ஆற்றலளிக்கும் நூலகங்கள் - உலகளாவிய கண்ணோட்டங்கள்" (Libraries Empowering Communities – Global Perspectives) என்ற தலைப்பில் பி.என். பணிக்கர் அறக்கட்டளையால் திருவனந்தபுரத்தில் உள்ள கனகக்குன்னு அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில், இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.
இந்த நிகழ்வு, இந்தியாவின் நூலக மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடி என்று போற்றப்படும் திரு. பி.என். பணிக்கர் அவர்களின் உத்வேகமான பார்வையால் தொடங்கப்பட்ட கேரளாவின் ஒழுங்கமைக்கப்பட்ட நூலக இயக்கத்தின் 80-வது ஆண்டைக் குறிக்கிறது.
குடியரசுத் துணைத்தலைவர் தனது உரையில், வாசிப்பு கலாச்சாரம், டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் அறிவைப் பரப்புவதன் மூலம் சமூகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குத் தொடர்ந்து பங்களித்து வரும் பி.என். பணிக்கர் அறக்கட்டளையை பாராட்டினார். மேலும், அறக்கட்டளையின் குறிக்கோளான "வாசித்து வளர்" என்பது சமுதாயத்தை அறிவொளி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிலையை நோக்கி இன்றும் வழிநடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் நூலகங்களை அறிவுக் கோயில்களாகப் போற்றினார். அவை விமர்சன சிந்தனையை வளர்க்கும் இடங்களாகவும், தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் அதிகாரம் அளிப்பதாகவும் அவர் விவரித்தார்.
ஆதி சங்கராச்சாரியார் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறுபட்ட சிந்தனைகளை ஒன்றிணைக்கவும் பாரதம் முழுவதும் பயணம் செய்ததை குடியரசு துணைத்தலைவர் நினைவுகூர்ந்தார். எண்ணற்ற பிற ஞானிகளும் சிந்தனையாளர்களும் தங்கள் ஞானம், இரக்கம் மற்றும் பார்வையால் நமது நாகரிகத்தை வளப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் பண்டைய நாகரிக நெறிமுறைகளைப் பற்றிப் பேசிய குடியரசு துணைத்தலைவர், காவியங்கள் முதல் நவீன நூலகங்கள் வரை நீண்டுள்ள நாட்டின் கற்றல் பாரம்பரியம், ஞானம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான தேடலை இன்றும் தேசத்திற்கு ஊக்கப்படுத்துவதாகக் கூறினார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நூலகங்கள் உண்மையான தகவல்களைப் பெறுவதற்கும், தவறான தகவல்களை எதிர்கொள்வதற்கும் மக்களுக்கு உதவும் அறிவு மையங்களாகச் செயல்படுகின்றன என்று திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். தொழில்நுட்பம் தகவல்களை எளிதில் அணுக அனுமதித்தாலும், நூலகங்கள் தான் சமுதாயத்தில் ஆழமான சிந்தனை மற்றும் அர்த்தமுள்ள உரையாடலை வளர்க்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கேரளாவின் கல்வி மற்றும் எழுத்தறிவில் உள்ள சிறப்பான பாரம்பரியத்தைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், திரு. பி.என். பணிக்கர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது தொலைநோக்குப் பார்வை, நூலகங்களை உயிரோட்டமுள்ள சமூக மையங்களாக மாற்றி, புத்தகங்களையும் கற்றலையும் ஒவ்வொரு குடிமகனிடமும் கொண்டு சேர்த்ததாகத் தெரிவித்தார்.
தனது உரை நிறைவில், நூலகங்கள் கற்றல், உள்ளடக்கம் மற்றும் புதுமையின் மாறுபடும் இடங்கள் என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார். அறிவின் ஆற்றல் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளித்து, நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் சமூக நூலகங்களின் வலையமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மாநாட்டைப் பற்றி:
பி.என். பணிக்கர் அறக்கட்டளையால் 2025 நவம்பர் 2 முதல் 3 வரை திருவனந்தபுரம் கனகக்குன்னு அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச மாநாடு, அறிவுச் சமூகத்தில் நூலகங்களின் வளர்ந்து வரும் பங்கைப் பற்றி விவாதிக்க நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நூலக வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கிறது. இந்த மாநாடு, கேரளாவின் நூலக இயக்கத்தின் நீடித்த பாரம்பரியத்தைக் கொண்டாடுவதுடன், சமூகப் பங்கேற்பு, டிஜிட்டல் அணுகல் மற்றும் நிலையான அறிவுச் சூழல்களை மேம்படுத்துவதற்கான உத்திகளையும் ஆராய்கிறது.
***
(Release ID: 2185437)
AD/SV/RJ
(Release ID: 2185474)
Visitor Counter : 14