பாதுகாப்பு அமைச்சகம்
எரிபொருள் நிரப்பும் போது காயமடைந்த ஈரான் மீனவருக்கு இந்தியக் கடலோரக் காவல்படை மருத்துவ சிகிச்சை உதவி
Posted On:
28 OCT 2025 5:02PM by PIB Chennai
ஈரான் நாட்டின் மீன்பிடி படகான அல்-ஓவைசில் எரிபொருள் நிரப்பும் போது வெடித்து சிதறிய சம்பவத்தால் இரு கண்கள் மற்றும் காதுகளில் பலத்த காயம் அடைந்த ஈரான் மீனவருக்கு இந்தியக் கடலோரக் காவல்படை மருத்துவ சிகிச்சை உதவியை அளித்துள்ளது. இந்தப் படகு 5 பணியாளர்களுடன் கேரளாவின் கொச்சிக்கு மேற்கே சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலில் மத்தியில் சென்று கொண்டிருந்த போது அதன் எந்திரம் பழுதடைந்தது.
இது குறித்த தகவல் ஈரான் நாட்டின் சபகரில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து மும்பையில் உள்ள கடல்சார் ஒருங்கிணைப்பு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவ உதவி அளிக்குமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல் படையின் கப்பலான சாசெட் கப்பல் பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மார்ஷல் தீவின் எம்டி எஸ்டிஐ கிரேஸ் கப்பலுக்கும் உடனடி உதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. உடனடியாக சிகிச்சை அளிப்பது குறித்த அறிவுறுத்தலை இந்தியக் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் தொலை மருத்துவம் வாயிலாக பாதிக்கப்பட்ட கப்பலிலிருந்தவர்களுக்கு வழங்கினார்கள்.
அதைத் தொடர்ந்து இந்தியக் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த சாசெட் கப்பலுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட மீனவர் ஏற்றப்பட்டார். தற்போது அக்கப்பலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக அவர் கோவா கொண்டு செல்லப்படுகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183368
***
SS/IR/KPG/SH
(Release ID: 2183480)
Visitor Counter : 6