PIB Headquarters
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல்
Posted On:
22 OCT 2025 10:25AM by PIB Chennai
உலகளவில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவு அறிவியல் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் ஒரு ஆழமான மாற்றத்திற்கு பணியாளர்கள் உள்ளாகி வருகின்றனர். சுகாதாரம், நிதி, கல்வி, உற்பத்தி மற்றும் பொது சேவைகள் போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதால், பரந்த அளவிலான செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வியறிவு மற்றும் சிறப்புத் திறமைக்கான அவசரத் தேவை உள்ளது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தயார்நிலைக்கான திறன் (எஸ்ஓஏஆர்) திட்டம், இந்தியாவின் கல்விக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை ஒருங்கிணைக்க திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் ஒரு உத்திசார் முயற்சியைக் குறிக்கிறது. இது உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற அரசின் இலக்குடன் ஒத்துப்போகிறது. 2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் 4.0-ன் கீழ் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் களங்களில் விரிவாக்கங்கள் உட்பட, 2015 முதல் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் திறன் இந்தியா இயக்கத்தின் 10 ஆண்டுகால சாதனையுடன் பொருந்தி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தயார்நிலைக்கான திறன் (எஸ்ஓஏஆர்) முன்முயற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே செயற்கை நுண்ணறிவு கல்வியறிவை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது. இயந்திர கற்றல் அடிப்படைகள் மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவு பயன்பாடு போன்ற அடிப்படைக் கருத்துக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், கற்பவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டுவதையும், தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கு அவர்களை தயார்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வியாளர்களுக்கு, ஏற்கனவே உள்ள பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு தொகுதிகளை இணைத்து, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பயனுள்ள விநியோகத்தையும் சீரமைப்பையும் உறுதி செய்வதற்கான சிறப்புப் பயிற்சியை எஸ்ஓஏஆர் முன்முயற்சி வழங்குகிறது.
தொழில் துறையில், தற்சார்பை மேம்படுத்தும் வகையில் இதனைப் பயன்படுத்த முடியும் என்பதால், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்த, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான திறன்களை வளர்ப்பதில் எஸ்ஓஏஆர் கவனம் செலுத்துகிறது.
தொழில்நுட்பம் சார்ந்த இந்தியாவை உருவாக்குவது எஸ்ஓஏஆர் முன்முயற்சியின் நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வையாகும். செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் முயற்சிகளுக்கு அதன் இளைஞர்களைத் தயார்படுத்துவதன் மூலம் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்த முடியும்.
புதுமைகளை வளர்ப்பதன் மூலமும், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதன் மூலமும், தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவதன் மூலமும் செயற்கை நுண்ணறிவு இந்தியாவின் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளுக்கு இணங்க, செயற்கை நுண்ணறிவு, வகுப்பறைகள் மற்றும் திறன் மேம்பாட்டு கட்டமைப்புகளில் தடையின்றி ஒருங்கிணைக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் பணியாளர் மேம்பாட்டில் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக எஸ்ஓஏஆர் திட்டம் உள்ளது. பள்ளி பாடத்திட்டங்கள் மற்றும் தொழில் பயிற்சிக்குள் ஏஐ எழுத்தறிவை உட்பொதிப்பதன் மூலம், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிநவீன திறன்களுடன் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், புதுமை மற்றும் நெறிமுறை தொழில்நுட்ப பயன்பாட்டின் கலாச்சாரத்தையும் எஸ்ஓஏஆர் வளர்க்கிறது. இந்தியாவின் இளைஞர்கள் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை இயக்க இது அதிகாரம் அளிக்கிறது. வளர்ச்சியடைந்த பாரதம் 2047 தொலைநோக்குப் பார்வையின் ஒரு மூலக்கல்லாக, உலகளாவிய கண்டுபிடிப்புகளின் எதிர்காலத்தை வடிவமைக்கத் தயாராக இருக்கும் டிஜிட்டல் ரீதியாக அனைவரையும் உள்ளடக்கிய, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் தன் நிறைவு கொண்ட இந்தியாவிற்கு எஸ்ஓஏஆர் அடித்தளத்தை அமைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181411
***
SS/PKV/RJ
(Release ID: 2181528)
Visitor Counter : 16