PIB Headquarters
azadi ka amrit mahotsav

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு, உத்தராகண்டில் விவசாயம், சுற்றுலா மற்றும் தொழில்துறையை வலுப்படுத்தியுள்ளது

Posted On: 21 OCT 2025 11:37AM by PIB Chennai

சமீபத்திய ஜிஎஸ்டி விகிதச் சீர்திருத்தம் உத்தராகண்ட் பொருளாதாரத்திற்கு சரியான நேரத்தில் ஊக்கத்தை அளித்துள்ளது. விவசாயம், சுற்றுலா, கைவினைப்பொருட்கள் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் வரிகளைக் குறைத்துள்ளது. இந்தச் சீர்திருத்தம் உத்தராகண்டின் நிலையான வளர்ச்சி, மலைப்பகுதிகளில் வாழ்வாதாரத்தை வளர்ப்பது, சமவெளிகளில் வளர்ந்து வரும் தொழில்துறை மையங்களை வலுப்படுத்துதல் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது.

ஜிஎஸ்டி விகிதம் 12% என்பதிலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதன் மூலம், பஹாரி துவரம் பருப்பை இயற்கை உணவு மற்றும் சுகாதார உணவுச் சந்தைகளில் அதிக போட்டித்தன்மையுள்ளதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் நிலையான மலை விவசாயத்தை ஊக்குவிக்கும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருமான வாய்ப்புகளை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தராகண்ட் சிவப்பு அரிசிக்கு ஜிஎஸ்டி விகிதம் 12% என்பதிலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதன் மூலம், விலைகள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த மாற்றம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிவப்பு அரிசி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 4,000 மக்களுக்கு உதவுகிறது. உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது, நிலையான மலை விவசாயத்தை ஊக்குவிக்கிறது.

ஹோட்டல்கள், உணவகங்கள் உட்பட சுற்றுலா என்பது  உத்தராகண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.57% பங்களிப்பு செய்கிறது. சுமார் 80,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. ரூ.7,500 வரையிலான ஹோட்டல் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் 12% என்பதிலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதால், நைனிடால், முசோரி, அவுலி, சோப்தா, முன்ஸ்யாரி, ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் உள்ள சிறிய ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் இல்லங்களுக்கு பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தராகண்டின் மலை மாவட்டங்களில், கையால் பின்னப்பட்ட உள்ளூர் ஸ்வெட்டர்கள், தொப்பிகள், சாக்ஸ் ஆகியவை மலைவாழ் பெண்கள் தலைமையில் ஒரு முக்கியமான பருவகால குடிசைத் தொழிலாக உள்ளன. இவற்றுக்கு ஜிஎஸ்டி விகிதம் 12% என்பதிலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதால், விலைகள் 6–7% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சுமார் 10,000 பேரின் வாழ்வாதாரங்களுக்கு உதவுகிறது.

உத்தராகண்டில் 383 பதிவுசெய்யப்பட்ட உணவு பதப்படுத்தும் அலகுகள் உள்ளன, இவை பெரும்பான்மையாக ருத்ராபூரில் அமைந்துள்ளன. சுமார்  30,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன . ஜிஎஸ்டி விகிதத்தை 12% என்பதிலிருந்து 5% ஆகக் குறைத்தது லாபத்தை மேம்படுத்தும், மதிப்புக் கூட்டலை ஊக்குவிக்கும், பழங்கள்  பதப்படுத்துதல், மூலிகைப் பொருட்கள் மற்றும் இயற்கை உணவுகள் போன்ற துறைகளில் முதலீட்டை ஊக்குவிக்கும், மாநிலத்தின் வேளாண்-தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரிச்சுமைகளைக் குறைத்து போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலம், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு, சுற்றுலா, எம்எஸ்எம்இ வளர்ச்சி, பசுமை தொழில்முனைவு ஆகியவற்றை  வலுப்படுத்தும். இந்த நடவடிக்கைகள் மலைக்கும் சந்தைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, உத்தராகண்டின் அனைவருக்குமான, நிலையான, தற்சார்பு வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181101  

*****

SS/SMB/SG

 


(Release ID: 2181226) Visitor Counter : 8