விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று கோரக்பூரில் உள்ள தும்ரி குர்த் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார்
प्रविष्टि तिथि:
18 OCT 2025 3:37PM by PIB Chennai
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தும்ரி குர்த் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 'கிராம சபை' நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று கிராமப்புற சகோதர, சகோதரிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் ஏராளமான உள்ளூர்வாசிகள், விவசாயிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் உத்தரபிரதேச அரசுகளின் கூட்டு முயற்சிகள் குறித்து திரு சிவராஜ் சிங் சௌஹான் பேசினார். மேலும் உற்பத்தியை அதிகரிக்கவும், சிறந்த விதைகளை வழங்கவும், செலவுகளைக் குறைக்கவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். பயிர் இழப்புகளுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதை மத்திய அமைச்சர் உறுதி செய்தார். விவசாயிகளுடன் உரையாடியபோது, முக்கிய பயிர்கள், உற்பத்தி செலவுகள் மற்றும் உள்ளூர் உணவுக் கடைகளின் தேவை போன்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் கருத்துகளைப் பெற்றார்.
மத்திய அரசின் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு' திட்டத்தின் கீழ் பயிறு வகைகள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சி குறித்து திரு. சௌஹான் தெரிவித்ததோடு, விவசாயிகளிடமிருந்தும் ஆலோசனைகளை கோரினார். இந்த ஆண்டு, ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது விவசாயிகளுக்கு கணிசமாக பயனளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக கோதுமை, பருப்பு, பயிறு மற்றும் கடுகு ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு குறித்த விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், விவசாய இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 12% மற்றும் 18% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக திரு. சிவராஜ் சிங் கூறினார், இது விவசாயிகளுக்கு நேரடி நிதி நன்மைகளை வழங்குகிறது.
விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன்வளம், தேனீ வளர்ப்பு மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றையும் மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் விவசாயிகளை வலியுறுத்தினார். விலங்குகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், அங்கு அவர்கள் மத்திய அமைச்சர் திரு. சௌஹானுடன் தங்கள் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாய வளர்ச்சிக்காக அனைவரும் ஒத்துழைக்கவும் பங்கேற்கவும் வேண்டும் என திரு சௌஹான் வேண்டுகோள் விடுத்தார்.
******
(Release ID: 2180711)
AD/PKV/SG
(रिलीज़ आईडी: 2180787)
आगंतुक पटल : 19