நிதி அமைச்சகம்
விவசாயிகள் உற்பத்தி அமைப்பின் தேவைகள் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப ஊரக வங்கிகள் தங்களது சேவைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: மத்திய நிதியமைச்சர்
Posted On:
17 OCT 2025 12:29PM by PIB Chennai
விவசாயிகள் உற்பத்தி அமைப்பின் தேவைகள் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப ஊரக வங்கிகள் தங்களது சேவைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் கர்நாடகா கிராமிய வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (16.10.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிசார் சேவைகள் துறைச் செயலர் திரு எம் நாகராஜூ, நபார்டு வங்கித்தலைவரும் கனரா வங்கியின் செயல் இயக்குநருமான திரு கே வி ஷாஜி மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கிராமிய வங்கிகளில் கடனுதவிகள், வராக்கடன் மற்றும் நிதிசார் சேவைகள் தொடர்பான செயல்திறன், அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு அம்சங்களை அவர் ஆய்வு செய்தார். வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு ஏற்ப முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் கவனம் செலுத்துவதுடன் வேளாண் கடனுதவி திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இப்பகுதியில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கர்நாடகா கிராமிய வங்கிகள் மற்றும் கனரா வங்கி ஆகியவை அம்மாநில அரசின் துறை சார்ந்த கடனுதவி திட்டங்களை அதிகரிப்பதுடன் எம்எஸ்எம்இ மற்றும் அது சார்ந்த துறைகளுக்கும் கடனுதவியை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து நுகர்வு, அதிகரித்துள்ளதன் காரணமாக கிராமப்புற பகுதிகளில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனைக் கருத்தில் கொண்டு வங்கிகள் கடனுதவிகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180232
***
SS/SV/KPG/KR
(Release ID: 2180375)
Visitor Counter : 14