சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
இந்தியா – பார்படாஸ் இடையேயான நட்புறவு பொருளாதாரம் சார்ந்தது மட்டுமின்றி இதயபூர்வமானது: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
Posted On:
10 OCT 2025 2:46PM by PIB Chennai
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பு மற்றும் நேர்மையின் மூலம் உலக அளவில் வலுவான மதிப்பைக் கட்டமைத்துள்ளதாக மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா பெருமிதம் தெரிவித்துள்ளார். பார்படாஸில் நடைபெறும் காமன்வெல்த் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டின் இடையே வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கலந்துரையாடிய அவர் இந்திய வம்சாவழியினர் தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திர உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடி வருவது இந்திய சமூகத்தினரிடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சரியான வழிகாட்டுதல்களையும் வாய்மை மற்றும் கடமை உணர்வையும் தொடர்ந்து உபதேசிப்பதாகவுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக பார்படாஸ் தேசிய நாடாளுமன்ற வளாகத்தில் திரு ஓம் பிர்லா தலைமையிலான இந்திய நாடாளுமன்ற தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேரில் சென்று பார்வையிட்டது. இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கு பார்படாஸ் நாடாளுமன்றத் தலைவர் திரு ஆர்தர் ஹோல்டர் சிறப்பான வரவேற்பளித்தார். இந்தியா, பார்படாஸ் இடையே பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, ஜனநாயக மாண்புகளை பரிமாறிக்கொள்வது, சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவது போன்ற அம்சங்கள் குறித்து இரு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தனர்.
பார்படாஸின் சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 1966-ம் ஆண்டு இந்திய அரசால் பரிசாக வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற தலைவரின் இருக்கையை பார்வையிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். தேக்கு மரத்தால் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த இருக்கை இரு நாடுகளிடையேயான வரலாறு மற்றும் கலாச்சார பிணைப்பின் அடையாளமாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாய பாரம்பரிய நடைமுறைகள், நாடாளுமன்ற செயல்பாடுகள் ஆகியவை இவ்விரு நாடுகளிடையேயான நெருக்கமான நட்புறவை வளர்த்துள்ளதாக தெரிவித்தார். கல்வி, கலாச்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நாடாளுமன்ற செயல்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதென இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நவீன தொழில்நுட்பம் விண்வெளி வாய்ப்புகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக திரு ஓம் பிர்லா கூறினார். அண்மையில் இந்தியா மற்றும் பார்படாஸ் தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177304
***
SS/SV/SG/SH
(Release ID: 2177573)
Visitor Counter : 15