தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செப்டம்பர் 2025 ஆன்லைன் குறுகிய கால அனுபவப் பயிற்சி நிறைவடைந்தது

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 74 பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்

இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான சமுதாயத்தை கட்டமைக்க உதவ வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் திருமதி விஜய பாரதி சயானி தனது நிறைவுரையில் வலியுறுத்தினார்

Posted On: 04 OCT 2025 12:49PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கான தனது 3வது குறுகிய கால ஆன்லைன் அனுபவப் பயிற்சித் திட்டத்தை  நிறைவு செய்தது. இதில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 74 பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்று வெற்றிகரமாகப் பயிற்சியை நிறைவு செய்தனர். இந்த அனுபவப் பயிற்சித் திட்டத்தை ஆணையத்தின் பொதுச் செயலாளர் திரு. பரத் லால், ஆகஸ்ட் 22, 2025 அன்று தொடங்கி வைத்தார்.

நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக உரையாற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் திருமதி விஜய பாரதி சயானி, இரண்டு வார கால செறிவூட்டும் பயணத்தை வெற்றிகரமாக முடித்த அனுபவப் பயிற்சியாளர்களைப் பாராட்டினார். நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பங்கை வலியுறுத்திய அவர், பெண்களின் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு, மனநலம், காவல், நீதி மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் ஆணையத்தின் பணிகளை எடுத்துரைத்தார்.

உளவியல், தடய அறிவியல், வணிகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற துறைகளில் நிபுணர்களின் சிறப்பான அமர்வுகளைச் சுட்டிக்காட்டிய திருமதி விஜய பாரதி சயானி, இப்பயிற்சியில் வழங்கப்பட்ட கற்றலின் பரந்த தன்மையைப் பாராட்டினார். ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி, மனித மாண்பின் முனைப்பான பாதுகாவலர்களாக மாறவும், தங்கள் அறிவை சமூக நன்மைக்காகப் பயன்படுத்தவும், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தவும் பயிற்சியாளர்களை அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க உதவ வேண்டும் என்ற செயல் திட்டத்திற்கான அழைப்புடன் அவர் தனது உரையை முடித்தார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைச் செயலாளர் திருமதி சைடிங்புய் சாக்சுவாக், அனுபவப் பயிற்சி அறிக்கையை சமர்ப்பித்தார். ஆணையத்தின் உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மனித உரிமைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து நடத்திய அமர்வுகளைத் தவிர, பயிற்சியாளர்கள் தில்லி திகார் சிறை, காவல் நிலையம் மற்றும் ஆஷா கிரண் காப்பகம் ஆகியவற்றிற்கு மெய்நிகர் சுற்றுப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பல்வேறு அரசு நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், கள யதார்த்தங்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த புரிதல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. புத்தக மதிப்புரை, குழு ஆய்வுத் திட்ட விளக்கக்காட்சி மற்றும் பேச்சுப் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைச் செயலாளர் திரு. சமீர் குமார் மற்றும் இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் வீரேந்தர் சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த குறுகிய கால ஆன்லைன் அனுபவப் பயிற்சி, பல்வேறு கல்வித் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கிய மனித உரிமைப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றைக் கையாள்வதற்கான கருவிகளை வழங்குகிறது. செயல்முறை கற்றல் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம், பங்கேற்பாளர்கள் சர்வதேச சட்டம், இந்தியாவில் உள்ள மனித உரிமைகள் சார்ந்த கவலைகள் மற்றும் நடைமுறை ரீதியான வாதாடும் முறைகள் பற்றி ஆராய்கின்றனர்.

*****

(Release ID: 2174723)

AD/EA/SG


(Release ID: 2174860) Visitor Counter : 11
Read this release in: Gujarati , English , Urdu , Hindi