சுரங்கங்கள் அமைச்சகம்
தேசிய புவி அறிவியல் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
Posted On:
26 SEP 2025 4:13PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று (26.09.2025) நடைபெற்ற விழாவில் தேசிய புவியியல் விருதுகள் 2024-ஐ குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். புவி அறிவியல் துறையில் தலைசிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
வாழ்நாள் சாதனைக்கான தேசிய புவியியல் விருது (01) தேசிய இளம் புவியியல் விஞ்ஞானி விருது (01) தேசிய புவியியல் விருதுகள் (புவி அறிவியலின் பல்வேறு துறைகளில் 10 விருதுகள்) என 3 வகைமைகளில் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
வாழ்நாள் சாதனைக்கான தேசிய புவியியல் விருது பேராசிரியர் ஷ்யாம் சுந்தர் ராய்-க்கு வழங்கப்பட்டது. தேசிய இளம் புவியியல் விஞ்ஞானி விருது இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் மூத்த புவியியலளார் சுசோபன் நியோகிக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மனித குல நாகரீக வளர்ச்சியில் கனிமங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்றார். மனித நாகரீகத்தின் கற்காலம், வெண்கல காலம், இரும்பு காலம் ஆகியவை கனிமங்களால் பெயர் சூட்டப்பட்டுள்ளன என்பதை அவர் சுட்டிக் காட்டினார். கனிமப் பொருட்கள் வீணாவதை குறைக்க அவற்றுக்கு மதிப்புக் கூடுதல் அளிக்க தொழில்நுட்பங்களை உருவாக்குவதும், பயன்படுத்துவதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். நீடித்த தன்மை, புதிய கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு உருவாக்கம், எந்திரக் கற்றல், சுரங்கத் தொழிலில் ட்ரோன் அடிப்படையிலான ஆய்வுகள் போன்றவற்றில் உறுதிப்பாடு கொண்டுள்ள சுரங்க அமைச்சகத்தின் பணிகள் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி சுரங்கங்கள் அமைச்சக செயலாளர் திரு பியூஷ் கோயல், இந்திய புவியியல் ஆய்வு நிறுவன தலைமை இயக்குநர் திரு ஆசித் சாஹா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171732
***
SS/SMB/SG/SH
(Release ID: 2172013)
Visitor Counter : 7