பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
28-வது தேசிய மின்-ஆளுகை மாநாடு விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது - ஆந்திர முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இணைந்து தொடங்கி வைக்கின்றனர்
Posted On:
21 SEP 2025 5:08PM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை, மத்திய மின்னணுவியல் - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆந்திர மாநில அரசு ஆகியவை இணைந்து, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் 28வது தேசிய மின்-ஆளுகை (NCeG) 2025 மாநாட்டை நடத்தவுள்ளன. 2025 செப்டம்பர் 22–23 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் கருப்பொருள் 'வளர்ச்சியடைந்த பாரதத்தில் மக்களுக்கான சேவைகளும் அதில் டிஜிட்டல் மாற்றமும்' என்பதாகும்.
இந்த இரண்டு நாள் மாநாட்டை நாளை (2025 செப்டம்பர் 22) ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். இந்த நிகழ்வில் ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண், ஆந்திரப் பிரதேசத்தின் தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு என். லோகேஷ் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில் மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் - பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறைச் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ், மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன், ஆந்திர மாநில அரசின் தலைமைச் செயலாளர் திரு கே. விஜயானந்த் ஆகியோரும் உரையாற்றுவார்கள்.
இந்த மாநாட்டின் போது, 2025-ம் ஆண்டுக்கான மின்-ஆளுகைக்கான தேசிய விருதுகள், 19 முன்மாதிரியான முயற்சிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆறு பிரிவுகளில் இந்த விருதுகள் மத்திய, மாநில, மாவட்ட அதிகாரிகள், கிராம பஞ்சாயத்துகள், கல்வி/ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தியாவில் பாதுகாப்பான, நிலையான மின்-சேவை வழங்கலை உறுதி செய்வதற்கான புதுமையான அணுகுமுறைகளைப் பற்றி அந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். அரசு அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாட்டில் 6 முழுமையான அமர்வுகள், 6 சிறு கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெறும். இதில், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த சுமார் 70 வல்லுநர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். பல்வேறு துணை கருப்பொருள்களில் அவர்கள் சிறந்த நடைமுறைகளை எடுத்துரைப்பார்கள். 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். மின்-ஆளுகையில் இந்தியாவின் சாதனைகளை வெளிப்படுத்தும் ஒரு கண்காட்சியும் இந்த மாநாட்டில் இடம்பெறும்.
***
(Release ID: 2169261)
AD/PLM/RJ
(Release ID: 2169344)