வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளியிட்டார்
Posted On:
20 SEP 2025 6:50PM by PIB Chennai
‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ முன்முயற்சியின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் புதுதில்லியில் வெளியிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் இந்த முன்முயற்சி முதலீடுகளை ஈர்த்ததுடன், புத்தாக்கத்தை ஊக்குவித்து, உலகத் தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்கி, உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் புத்தாக்கத் துறையில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்தி உள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதிலும், புத்தாக்கத்தை வளர்ப்பதிலும், திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதிலும், வெளிநாட்டு முதலீடுகளை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
நினைவு நாணயத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் திரு கோயல், “இந்தப் பயணத்தின் 10 ஆண்டுகளை நாம் நிறைவு செய்யும் வேளையில், நெகிழ்தன்மை வாய்ந்த, தன்னிறைவான மற்றும் உலக அளவில் போட்டித் தன்மைமிக்க பொருளாதாரமாக இந்தியாவின் ஆற்றலை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்”, என்று கூறினார். இந்த முன்முயற்சி கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் உற்பத்தித் துறை மீதான நம்பிக்கையை அதிகரித்து, ஒரு காலத்தில் சேவைகளால் இயக்கப்படும் பொருளாதாரமாக இருந்ததிலிருந்து தற்போது உலகளாவிய உற்பத்தி ஆற்றல் மையமாக அங்கீகரிக்கப்படும் வகையில் நாட்டை உயர்த்தியுள்ளது.
2014 மற்றும் 2024 க்கு இடையில், இந்தியா 667 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இது தாராளமயமாக்கலுக்குப் பிறகு வந்த மொத்த வரவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஆகும். வணிகம் செய்வதை எளிதாக்குவதில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது, 2014-ல் 142-வது இடத்தில் இருந்து உலக வங்கியின் 2020-ம் ஆண்டுக்கான வர்த்தக அறிக்கையின்படி 63 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 437.42 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இது இந்தியாவை உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய செயற்பாட்டாளராக நிலைநிறுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168987
***
AD/RB/RJ
(Release ID: 2169235)