பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தவிர்க்கக்கூடிய மேல்முறையீடுகளைக் குறைத்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
20 SEP 2025 4:06PM by PIB Chennai
நீதிமன்ற வழக்குகளைக் குறைப்பதற்கான அடிப்படை தேவையை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (CAT) நிறைவேற்ற வேண்டும் எனவும் அதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரும் உதவ வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் 10-வது அகில இந்திய மாநாட்டில் அவர் உரையாற்றினார். தவிர்க்கக்கூடிய மேல்முறையீடுகளைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஊழியர்களுக்கு நீதியை எளிதாக்குவதும் நீதித்துறை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதுமே மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவான, முறையில் நீதி வழங்குவதற்காகவும், சேவை தொடர்பான வழக்குகளின் பெரும் சுமையிலிருந்து நீதிமன்றங்களை விடுவிப்பதற்காகவும் அரசியலமைப்பின் 323-ஏ பிரிவின் கீழ் 1985-ம் ஆண்டு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதை திரு ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தீர்ப்பாயத்தில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படுவதை அரசு உறுதிசெய்து, அது முழு பலத்துடன் செயல்பட வகை செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார். நிலுவையில் உள்ள வழக்குகளை காலக்கெடுவுக்குள் முடித்து, நவீனமயமாக்கப்பட்ட வழக்கு மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
வழக்குகளை முடித்து வைக்கும் விகிதங்கள், நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைத்தல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், வழக்குரைஞர் திருப்தி போன்ற அம்சங்களைக் கொண்டு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அதன் செயல்திறன் தரப்படுத்தலை மேற்கொள்ளலாம் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். இத்தகைய நடவடிக்கைகள், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை ஊக்குவித்து, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தமது தொடக்க உரையில், நீதிக்கான அணுகலை எளிதாக்குவதிலும், நீதிமன்றங்களின் சுமையைக் குறைப்பதிலும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஆற்றும் முக்கிய பங்கை சுட்டிக் காட்டினார்.
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ரஞ்சித் மோர் தமது வரவேற்பு உரையில், வழக்கமான நீதிமன்றங்களிலிருந்து வேறுபட்ட வகையில் செயல்படும் இந்தத் தீர்ப்பாயத்தின் தனித்துவமான செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
மத்திய சட்ட அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் பாராட்டத்தக்கவை என்றாலும், இரு தரப்பினரும் மேல்முறையீடு செய்வது நீதியை தாமதப்படுத்துவதாக குறிப்பிட்டார். டிஜிட்டல் வழக்கு மேலாண்மையும் வெளிப்படைத்தன்மையும் சீர்திருத்தத்திற்கு மிக முக்கியமானவை என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், பார் கவுன்சில்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2168922)
AD/PLM/RJ
(Release ID: 2169036)