அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பயோஇ3 கொள்கையின் முதலாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
Posted On:
06 SEP 2025 10:47AM by PIB Chennai
புது தில்லியில் உள்ள சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம் (ஐசிஜிஇபி) இன்று பயோஇ3 கொள்கையின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்திய அரசின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புடன் உயிரி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் ஒரு முதன்மை முயற்சியாக பயோஇ3 கொள்கை கொண்டு வரப்பட்டது.
விவசாயம் மற்றும் சுத்தமான எரிசக்தியில் புத்தாக்கம் தொடர்பாக, ஆய்வகத்திலிருந்து சந்தைக்கு மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னணி தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்..
“பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் வேளாண்மை மற்றும் சுத்தமான எரிசக்திக்கான நிறுவனம்–தொழில் தொடர்பு” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புது தில்லியில் உள்ள தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம், குருகிராமில் உள்ள பூச்சிக்கொல்லி உருவாக்க தொழில்நுட்ப நிறுவனம், ஃபரிதாபாத்தில் உள்ள பிராந்திய உயிரி தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட முன்னணி தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு இரண்டு அமர்வுகளாக கட்டமைக்கப்பட்டது. முதல் அமர்வில், பங்கேற்ற நிறுவனங்களின் இயக்குநர்கள், தங்களின் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பருவநிலையைத் தாங்கும் விவசாயம் மற்றும் சுத்தமான எரிசக்தி ஆகிய துறைகளில் நடந்து வரும் ஆராய்ச்சிகளை விளக்கினர். இந்த விளக்கக்காட்சிகள் தேசிய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மை சவால்களை எதிர்கொள்ளும் நிறுவன வலிமைகள் மற்றும் புதுமையான திறன்களை எடுத்துக்காட்டுகின்றன.
இரண்டாவது அமர்வில் ஐசிஜிஇபி புது தில்லியின் இயக்குனர் டாக்டர் ரமேஷ் வி. சோண்டி தலைமையில் ஒரு தொழில்துறை குழு விவாதம் இடம்பெற்றது. தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
2024-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பயோஇ3 கொள்கை, இந்தியாவின் உயிரியல் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேற்கொள்ளும் அதே வேளையில், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
*****
(Release ID: 2164326 )
AD/PKV/SG
(Release ID: 2164363)
Visitor Counter : 2