கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி திட்டத்தை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்
Posted On:
05 SEP 2025 9:36PM by PIB Chennai
இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை நோக்கிய பயணத்தில் முக்கிய முயற்சியாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி திட்டத்தை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.
3.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலை, துறைமுக குடியிருப்பில் உள்ள தெருவிளக்குகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும். இந்த ஆலை தொடங்கப்பட்டிருப்பதன் வாயிலாக, பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் நாட்டின் முதல் துறைமுகம் என்ற பெருமையை வ.உ. சிதம்பரனார் துறைமுகம் பெற்றுள்ளது.
35.34 கோடி ரூபாய் செலவில் ஒரு முன்னோடி பசுமை மெத்தனால் பங்கரிங் மற்றும் எரிபொருள் நிரப்பும் அலைக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். காண்ட்லா மற்றும் தூத்துக்குடி இடையே முன்மொழியப்பட்ட கடலோர பசுமை கப்பல் பாதையுடன் இணைக்கப்பட்ட இந்த முயற்சி, தென்னிந்தியாவில் ஒரு முக்கிய பசுமை பங்கரிங் மையமாக வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இன்று தொடங்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், உலகளாவிய முதலீடுகளை ஈர்த்து, இந்தியாவின் பொருளாதார லட்சியங்களில் தமிழ்நாட்டை முக்கிய பங்களிப்பாளராக நிலை நிறுத்தும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ், 2030-ம் ஆண்டிற்குள் உலகின் சிறந்த 10 கப்பல் கட்டமைக்கும் நாடுகளில் ஒன்றாகவும் 2047-ம் ஆண்டுக்குள் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகவும் முன்னேறுவதை நோக்கி நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்”, என்று கூறினார்.
தமிழ்நாட்டின் சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்களிலும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மாற்றகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். நவீனமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டு பணிகளுக்காக இந்தத் துறைமுகங்களில் மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மலர் மரியாதை செலுத்திய அமைச்சர், “கப்பல் போக்குவரத்து மூலம் சுதேசி உணர்வைத் தூண்டிய வ.உ.சியின் மரபால் நாங்கள் ஆழ்ந்த உத்வேகம் பெற்றுள்ளோம். இன்று, பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ், பசுமை எரிசக்தி, புத்தாக்கம் மற்றும் தன்னிறைவு மூலம் நமது கப்பல் மற்றும் துறைமுகத் துறையை வலுப்படுத்துவதன் மூலம் அந்த உணர்வை முன்னெடுத்துச் செல்கிறோம்."
தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடி மக்களின் முழுமையான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அமைச்சர், "நாங்கள் இங்கு ஏற்றுக்கொள்ளும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், மக்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு காரணமாக அவற்றை சரியான நேரத்தில் முடிக்க முடிகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கான வேகம், அளவு மற்றும் அர்ப்பணிப்புடன் அமைச்சகம் செயல்படுகிறது," என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2164314
*****
(Release ID: 2164314)
AD/BR/SG
(Release ID: 2164351)
Visitor Counter : 2