பாதுகாப்பு அமைச்சகம்
சவால்கள் நிறைந்த காலகட்டத்தில், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு அவசியம்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
30 AUG 2025 1:06PM by PIB Chennai
பயங்கரவாதம், தொற்றுநோய்கள், பிராந்திய மோதல்கள் போன்ற சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு அவசியமான ஒன்று என பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று (30.08.2025) புதுதில்லியில் '21-ம் நூற்றாண்டில் போர்கள்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அவர் உரையாற்றினார். மோதல்கள், வர்த்தகப் போர்கள், உறுதியற்ற தன்மை ஆகியவை நிலவும் வேளையில், சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் ஆயுதப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் வீரத்தை வெளிப்படுத்தியது பற்றி அவர் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் மாற்றங்கள் நிகழும் சூழலில் பாதுகாப்பிற்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது சரியாக இருக்காது என திரு ராஜ்நாத் சிங் கூறினார். தற்சார்பு இந்தியாவால் மட்டுமே அதன் சுயாட்சியைப் பாதுகாக்க முடியும் என்று அரசு நம்புகிறது என்று அவர் கூறினார். பாதுகாப்பில் தற்சார்பு என்பது இறையாண்மை பற்றியது என அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள், ஆற்றல், தொழில்நுட்பம், வாய்ப்புகள் ஆகிய அனைத்தும் அதிகம் கொண்ட ஒரு நாடு தற்சார்பை நோக்கி முன்னேறும்போது உலகம் உற்று கவனிக்கிறது எனவும் இதுவே இந்தியாவின் பலம் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு ஆபரேஷன் சிந்தூர் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். உள்நாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி ஆயுதப் படைகள், இலக்குகள் மீது நடத்திய துல்லியமான தாக்குதல்கள் நமது பலத்தை நிரூபித்துள்ளன என்று அவர் கூறினார்.
இந்தியாவின் எதிர்கால பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய முயற்சியாக சுதர்சன் சக்ரா இயக்கத்தை அவர் குறிப்பிட்டார். பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்த இயக்கம், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என அவர் கூறினார்.
நமது அனைத்து போர்க்கப்பல்களும் இப்போது இந்தியாவில் கட்டமைக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். உத்தரபிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கை பாதுகாப்பு உற்பத்தித் துறையில் உள்நாட்டுமயமாக்கலையும் புதுமைகளையும் நோக்கிய ஒரு முக்கிய நவடிக்கையாகும் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
***
(Release ID: 2162174)
AD/SMB/PLM/RJ
(Release ID: 2162328)
Visitor Counter : 17