புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீனவர் சமூகத்திற்கு உதவ புதிய தொழில்நுட்பத்துடன் பொது எச்சரிக்கை முறை செப்டம்பர் 1 முதல் தொடங்கப்படும்

Posted On: 29 AUG 2025 5:59PM by PIB Chennai

பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையமும் மத்திய புவி அறிவியல் அமைச்சகமும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து 2025 ஆகஸ்ட் 29 அன்று சென்னையில் இந்தியக் கடலோர பகுதிகளில் கடல்சார் பல்வகை அபாயகால பணிகள் குறித்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் தொடங்கி வைத்தார். புயல்களிலிருந்து மீனவர் சமூகம் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவியாக செல்பேசி மூலம் புதிய தொழில்நுட்பத்துடன் பொது எச்சரிக்கை செய்யும் முறை சோதனை அடிப்படையில் செப்டம்பர் 1 முதல் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

மீனவர்கள் தங்களின் செல்பேசிகளை அமைதிப்படுத்தி (சைலண்ட்) வைத்திருந்தாலும் புயல் மற்றும் இதர இயற்கை சீற்றங்கள் பற்றிய எச்சரிக்கை ஒலியை எழுப்பும் வகையில் நவீன தொழில்நுட்பம் இந்த செயலியில் உள்ளது என்று அவர் கூறினார். 2023-ல் குஜராத் கடற்கரையில் தாழ்வான பகுதியில் குடியிருந்தோரை அப்புறப்படுத்துவதற்கு இந்த செயலி பயன்படுத்தப்பட்டதால் ஏராளமான உயிரிழப்பை தடுக்க முடிந்தது. பலவிதமான வானிலை எச்சரிக்கைகளை பெறுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சேச்செட் செயலி அல்லது பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் சமுத்திரா செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.  

பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் டி எம் பாலகிருஷ்ணன் நாயக் பிரதிநிதிகளை வரவேற்றார். அறிவியலால் இயக்கப்படும் முன்கூட்டிய எச்சரிக்கை சேவைகள் மூலம் இந்தியாவின் கடலோரத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதை உறுதி செய்வது நமது தொலைநோக்குப் பார்வை என்று அவர் வரவேற்புரையில் கூறினார்.

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பாலாஜி ராமகிருஷ்ணன் பேசுகையில், எந்தவொரு வானிலை சவாலையும் சமாளிப்பதற்கு நாட்டை தயார் செய்வதற்கான மெளசம் இயக்கம் பற்றி எடுத்துரைத்தார். இந்த இயக்கத்திற்காக புவிசார் அறிவியல் துறைக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பேசுகையில், மீனவர்கள் சுகாதார ரீதியான பாதிப்புக்கு உள்ளாகும்போது அவர்களை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த ஆம்புலன்ஸ் போன் அவசரகால கடல்சேவை அமைப்பை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்க வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிட்டார். அதிகரித்து வரும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக மீனவ சமூகத்திற்கு ஏற்படும் நீண்டகால சுகாதார பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்த அவர் வெப்பக் குறியீடு தரவு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கிழக்கு கடற்கரை முழுவதும் உள்ள கடல் தொடர்பான அபாயங்களுக்கு இந்தியாவின் தயார்நிலையை வலுப்படுத்த மூத்த அதிகாரிகள், அறிவியலாளர்கள், தொழில்துறை பிரநிதிகள், கடல்சார் அமைப்புகள், சமூக பங்குதாரர்கள் ஆகியோரை இந்த ஒரு நாள் மாநாடு ஒருங்கிணைத்தது.

***

AD/SMB/SG/KR/DL


(Release ID: 2161988) Visitor Counter : 14
Read this release in: English , Hindi