பாதுகாப்பு அமைச்சகம்
விசாகப்பட்டினத்தில் போர்க்கப்பல்கள் ஐஎன்எஸ் உதயகிரி & ஐஎன்எஸ் ஹிம்கிரி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன
Posted On:
26 AUG 2025 5:45PM by PIB Chennai
இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் கட்டும் திறமைக்கும், தன்னிறைவை நோக்கிய அதன் பயணத்திற்கும் சான்றாக, திட்டம் 17ஏ- ன் அங்கமான, மறைந்திருந்து தாக்கக்கூடிய இரண்டு பல்நோக்கு போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகியவை 2025, ஆகஸ்ட் 26 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன. மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் [ஐஎன்எஸ் உதயகிரி] மற்றும் கொல்கத்தாவின் கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் [ஐஎன்எஸ் ஹிம்கிரி] ஆகிய இரண்டு வெவ்வேறு கப்பல் கட்டும் தளங்களால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு முன்னணி நீர் மேற்பரப்பு போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
"இந்தப் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தி கடல்சார் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கும் உதவும் என்று திரு ராஜ்நாத் சிங் தமது உரையில் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நடவடிக்கை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் மகாசாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) என்ற கொள்கையை வலுப்படுத்துவதாக அவர் கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவான தற்சார்பு இந்தியாவை நனவாக்குவதற்கான ஒரு பெரிய முன்னேற்றமாகவும், அரசின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புக்கான சான்றாகவும் இந்த நடவடிக்கையை அமைச்சர் விவரித்தார். "ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகியவை தற்சார்புக்கான அரசு உறுதிப்பாட்டின் பிரகாசமான எடுத்துக்காட்டுகள், அனைத்து பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் நாடு அதிக உயரங்களைத் தொடும் மற்றும் தற்சார்பு இலக்கை அடையும் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும்," என்று அவர் கூறினார்.
"ஆக்கிரமிப்பு விரிவாக்கத்தில் இந்தியாவிற்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் எந்த நாட்டையும் தாக்கவோ அல்லது யாரையும் தூண்டிவிடவோ மாட்டோம். அதேசமயம், நமக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு நாம் தலைவணங்குவோம் என்று இதற்கு அர்த்தமல்ல. நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, தகுந்த பதிலடி கொடுப்பது எப்படி என்பது நமக்குத் தெரியும். பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாம் ஒரு பயனுள்ள, அளவிடப்பட்ட மற்றும் துல்லியமான பதிலடியைக் கொடுத்தோம். பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழிப்பதாக நாம் உறுதியளித்தோம், நமது இலக்குகளை வெற்றிகரமாக அடைந்தோம். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை, இது வெறும் இடைநிறுத்தம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இன்று, பிரதமர் திரு மோடி தலைமையில் முழு தேசமும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது, மேலும் இந்த தேசிய ஒற்றுமை, ஒழுக்கம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தான் நமது உண்மையான சக்தி" என்று அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160941
***
(Release ID: 2160941)
AD/SMB/RB/DL
(Release ID: 2161228)
Visitor Counter : 9