கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடல்சார் கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்த சென்னை ஐஐடி-யில் கடல்சார் ஹேக்கத்தான் 2025 தொடங்கியது
Posted On:
25 AUG 2025 9:26PM by PIB Chennai
துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம், சென்னை ஐஐடி, தேசிய கடல்சார் வளாகம், சென்னை துறைமுக ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் சென்னை ஐஐடி-யில் இந்தியாவின் கடல்சார் ஹேக்கத்தான் 2025-ஐ தொடங்கியது. சாகர்மாலா புத்தொழில் புதிய கண்டுபிடிப்பு முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஹேக்கத்தான் கடல்சார் துறையில் நவீன ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, புத்தொழில்கள், தொழில்முனைவு ஆகியவற்றுக்கான நிகழ்வாக அமைந்துள்ளது. இந்திய கடல்சார் வாரம் 2025-ன் முன்னோட்டமாகவும் இது உள்ளது.
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சக செயலாளர் திரு டி கே ராமச்சந்திரன், இந்தியாவின் கடல்சார் துறைக்கான வளர்ச்சி தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். ஆராய்ச்சி அமைப்புகளுக்கும், தொழில்துறைக்கும் இடையேயான தொடர்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தொழில்சார்ந்த சவால்களை அடையாளம் காண்பதில் இத்தகைய கடல்சார் ஹேக்கத்தான் நிகழ்வுகள் கிரியா ஊக்கியாக விளங்குகின்றன என்றும் அவர் கூறினார். இவை கடல்சார் அமிர்தகாலம் 2047-ன் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க புதிய தீர்வுகளாக இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வையொட்டி “நேவிக் #9- ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, புத்தொழில்கள், தொழில்முனைவு” என்பது குறித்த குழு விவாதம் நடைபெற்றது. ஒத்துழைப்பு மற்றும் கொள்கை ஆதரவுக்கான வாய்ப்புகள் குறித்து கொள்கைவகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், புத்தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
புத்தொழில் கண்காட்சி, சுதா & சங்கர் புதிய கண்டுபிடிப்பு மையத்தை பார்வையிடல் ஆகியவற்றுடன் நிகழ்வு நிறைவடைந்தது. இந்திய கடல்சார் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான இடமாக இந்த மையம் பங்கேற்பாளர்களுக்கு அமைந்திருந்தது.
கடல்சார் ஹேக்கத்தான் 2025-க்கான புதிய கண்டுபிடிப்பு போட்டிகள் பற்றிய அறிவிப்பு, அதிகாரபூர்வ இணையதளம், கையேடு, ஹேக்கத்தான் வீடியோ ஆகியவை இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன. இதன்படி,
- புத்தொழில் நிறுவனங்களுக்கான விண்ணப்பிக்கும் தளம் 2025 ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 29 வரை திறந்திருக்கும்.
- சென்னை ஐஐடியில் கடல்சார் ஹேக்கத்தான் 2025 அக்டோபர் 16 முதல் 18 வரை நடைபெறும்.
- இந்தியா கடல்சார் வாரம் 2025-ல் விருது வழங்குதல் மற்றும் தெரிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் இடம்பெறும்
தெரிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஆதரவை பெறும்.
- கருத்துரு நிரூபணத்திற்காக : ரூ.10 லட்சம் வரை
- தொழில் தொடங்குவதற்காக நிதியுதவி (குறைந்தபட்ச சாத்தியமான பொருள் உற்பத்தி): ரூ.60 லட்சம் வரை
- தொழில்நுட்ப முன்னோட்ட மானியம் (வர்த்தக ரீதியான விரிவாக்கம்) : ரூ. 1 கோடி வரை
கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030, அமிர்தகால தொலைநோக்கு 2047-ன் நீண்டகால இலக்குகள் ஆகியவற்றிற்கு இணங்க நீலப் பொருளாதாரத்திற்கு புதிய கண்டுபிடிப்பை, தொழில்முனைவை அதிகரிக்கச் செய்தல், வலுவான சூழலைக் கட்டமைத்தல் ஆகியவற்றில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் தொடர்ச்சியான அழுத்தத்தை கடல்சார் ஹேக்கத்தான் 2025 பிரதிபலிக்கிறது.
***
(Release ID: 2160758)
AD/SMB/AG/SG
(Release ID: 2160847)