விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

2040-ம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து ஒரு இந்தியர் 'வளர்ச்சியடைந்த இந்தியா-2047' என்று அறிவிப்பார், இது இந்தியாவின் சாதனையை பிரபஞ்சம் முழுவதும் ஒலிக்கச் செய்யும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 23 AUG 2025 5:14PM by PIB Chennai

அறிவியல், கவிதை, யதார்த்தம் மற்றும் எதிர்கால வாக்குறுதிகள் கலந்த உரையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2040 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து ஒரு இந்தியர்  '2047 இல் வளர்ச்சியடைந்த இந்தியா' என்று அறிவிப்பார் என்றும், இது இந்தியாவின் சாதனையை பிரபஞ்சம் முழுவதும் ஒலிக்கச் செய்யும் என்றும் கூறினார்.

பாரத மண்டபத்தில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் விண்வெளித் திட்டம் அதன் தொடக்கத்திலிருந்தே ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களைக் கடந்து, மக்களை மேம்படுத்துவது, வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பது பற்றியதாக உள்ளது என்று கூறினார். 2015-ம் ஆண்டில் முதல் மெகா பயனர் சந்திப்புக்குப் பிறகு ஒரு தசாப்தத்திற்குப் பிறகு சமீபத்தில் முடிவடைந்த தேசிய சந்திப்பு 2.0 -வையும் அவர் குறிப்பிட்டார்.

"தேசிய விண்வெளி தினம் என்பது விண்வெளியில் இந்தியாவின் சாதனைகள் ஒரு முடிவல்ல, மாறாக ஒரு பெரிய தொலைநோக்குப் பார்வைக்கான அடித்தளம். அங்கு அறிவியல், புதுமை மற்றும் பொதுநலன் ஆகியவை நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைகின்றன", என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ககன்யான் திட்டத்திற்குத் தயாராகி வரும் நான்கு விண்வெளி வீரர்களான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் மற்றும் குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோரை சுட்டிக்காட்டி, இஸ்ரோ, இந்தியாவிற்கு ஒரு மதிப்புமிக்க சொத்தை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

ஆளுகையில் விண்வெளி தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்திருந்த அழைப்பை நினைவு கூர்ந்த டாக்டர் ஜிதேந்திர சிங், 2015-ம் ஆண்டு முதன்மை மேம்பாட்டுத் திட்டங்களில் விண்வெளி பயன்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான தொலைநோக்குப் பார்வையை அமைத்ததாகக் குறிப்பிட்டார். "பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு மற்றும் தனியார் துறை இரண்டும் தங்கள் விண்வெளி திறன்களில் கணிசமாக வளர்ந்துள்ளன," என்று அவர் தெரிவித்தார். தேசிய மாநாட்டின் இரண்டாவது பதிப்பிற்கு முன்னதாக பயனர் துறைகளுடன் கிட்டத்தட்ட 300 தொடர்புகள் நடத்தப்பட்டதாகவும், சுமார் 5,000 பக்கங்களை உள்ளடக்கிய 90 ஆவணங்களை தயாரித்ததாகவும், இது 15 ஆண்டு கால திட்டத்திற்கான அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் கூறினார். இந்தத் திட்டம் 100 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது, அவற்றில் 70 சதவீதம் சிறிய செயற்கைக்கோள்கள், அரசின் தொழில்நுட்ப திட்டங்கள் மற்றும் தனியார் துறை தலைமையிலான செயல்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றின் கலவையின் மூலம் செயல்படுத்தப்படும்.

டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கூற்றுப்படி, இந்த செயல்திட்டம்  2040 மற்றும் அதற்குப் பிறகு இந்தியாவின் விண்வெளிப் பயணத்தை வழிநடத்தும், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, பேரிடர் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் விண்வெளித் திட்டம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டத்தில் நுழைந்துள்ளது என்றும், அது இனி குறியீட்டு சாதனைகளுடன் மட்டுப்படுத்தப்படாமல், நாட்டின் அறிவியல் முன்னேற்றம், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் பொது நலனுக்கு முக்கிய பங்களிப்பாளராக மாறியுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்த நிகழ்வில், பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான்-2025 மற்றும் இஸ்ரோ ரோபாட்டிக்ஸ் சவால் - URSC 2025 (IRoC-U 2025) ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் விருதுகளை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160151

***

AD/RB /RJ

 


(Release ID: 2160391)