பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் தமால், கிரீஸ் துறைமுகப் பயணத்தை நிறைவு செய்தது
Posted On:
23 AUG 2025 1:24PM by PIB Chennai
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால், இந்தியாவில் உள்ள தனது சொந்த தளத்திற்கு செல்லும் வழியில், ஆகஸ்ட் 19 முதல் 22 வரை கிரீஸ் நாட்டின் சவுடா விரிகுடா துறைமுகப் பயணத்தை மேற்கொண்டது. இந்தப் பயணத்தின்போது கப்பலின் குழுவினர் ஹெலனிக் கடற்படை மற்றும் நேட்டோ அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். 2025 , ஆகஸ்ட் 19 அன்று சவுடா விரிகுடா கடற்படை தளத்தின் தளபதி கமாடோர் டியோனிசியோஸ் மந்தடாகிஸ், நேட்டோ கடல்சார் செயல்பாட்டு பயிற்சி மையத்தின் தலைவர் கேப்டன் கூப்ளாக்கிஸ் இயாஸ், அமெரிக்க கடற்படையின் கடற்படை ஆதரவு நடவடிக்கை கமாண்டன்ட் கேப்டன் ஸ்டீபன் ஸ்டீசி ஆகியோரை கப்பலின் கமாண்டன்ட் சந்தித்தார். கலந்துரையாடலின் போது, செயல்பாட்டு விஷயங்கள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
கிரீஸ் நாட்டுக்கான இந்தியத் தூதர் திரு ருத்ரேந்திர டாண்டன், 2025, ஆகஸ்ட் 20 அன்று கப்பலைப் பார்வையிட்டு குழுவினருடன் உரையாடினார். கப்பலின் துறைமுகப் பயணத்தின்போது, குழுவினர் சவுடா கடற்படைத் தளம் மற்றும் ஆயுதத் தளம், உள்நாட்டுக் கடல்சார் அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். கப்பலின் குழுவினர் கிரீசில் உள்ள இரண்டாம் உலகப் போர் நினைவுக் கல்லறையிலும் அஞ்சலி செலுத்தினர்.
ஐஎன்எஸ் தமால் கப்பல், 2025, ஆகஸ்ட் 22 அன்று சவுடா விரிகுடாவிலிருந்து புறப்பட்டு, ஹெலனிக் கடற்படையின் ரூசென் வகுப்பு ரோந்துப் படகான எச்எஸ் ரிட்சோஸுடன் ஒரு பயிற்சியில் பங்கேற்றது. இது கடற்படைகளுக்கு இடையேயான இயங்குதன்மையை சரிபார்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்தியாவில் உள்ள தனது சொந்த தளத்திற்குச் செல்லும் வழியில், ஐஎன்எஸ் தமால் கப்பல் ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளின் துறைமுகங்களைப் பார்வையிடும். இது கடல்சார் ராஜிய உறவை மேலும் விரிவுபடுத்தவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்.
***
(Release ID: 2160064)
AD/PKV/SG
(Release ID: 2160129)