வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷென்ட்ரா-பிட்கின் தொழில்துறை பகுதியில் புதிய நில ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல்

Posted On: 22 AUG 2025 10:57AM by PIB Chennai

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள AURIC எனப்படும் ஷென்ட்ரா-பிட்கின் தொழில்துறை பகுதி, அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், தொழில் நிறுவனங்களுக்கு தொழில்துறை நிலங்களை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகத்தின் (என்ஐசிடிசி) கீழ் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கிரீன்ஃபீல்ட் ஸ்மார்ட் தொழில்துறை நகரம் AURIC ஆகும். இது தில்லி-மும்பை தொழில்துறை வழித்தடத்தின்  கீழ் உருவாக்கப்பட்டு வரும் ஒரு  தொழில்துறை நகரமாகும். அதிநவீன உள்கட்டமைப்பு, பல-மாதிரி இணைப்பு, டிஜிட்டல் நிர்வாகம், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்துறை நடைமுறைகள் மற்றும் தொழில்கள், தளவாடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் ஒருங்கிணைந்த சூழல் அமைப்பை  வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பல்வேறு வகையான தொழில்களை ஆதரிப்பதற்கும் தடையற்ற இணைப்பை வழங்குவதை இந்த நகரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீடுகள், சிறப்பு உணவுப் பொருட்கள், காகிதப் பொருட்கள், மின்னணு உற்பத்தி, சாலை கட்டுமான உபகரணங்கள், வார்ப்படத் தொழில் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டங்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் என்றும், சுமார் 1,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா தொழில்துறை நகரமைப்பு நிறுவனம்  மற்றும் என்ஐசிடிசி அதிகாரிகள் அடங்கிய நில ஒதுக்கீட்டுக் குழு, முன்னுரிமை மற்றும் விரிவாக்க வகைகளின் கீழ் விண்ணப்பங்களை பரிசீலித்தது. திட்ட அறிக்கைகள் மற்றும் துணை ஆவணங்கள் மூலம் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த தகவல்களின்படி, திட்ட சாத்தியக்கூறு, வருவாய், நிலத் தேவைகள் மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலங்களை இக்குழு  ஒதுக்கியுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு தொழில்துறை பங்குதாரர்களுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா ஆகியோரின் சமீபத்திய வருகைகள், கொள்கை கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழில்துறை கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்தின.

***

(Release ID: 2159657 )

AD/SS/PKV/AG/KR

 


(Release ID: 2159724)
Read this release in: English , Urdu , Hindi , Marathi