சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலா வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீதான தாக்கங்கள்

Posted On: 21 AUG 2025 4:19PM by PIB Chennai

சுற்றுலா அமைச்சகம் 2014-15-ல் அடையாளம் காணப்பட்ட மையக்கருத்திலான சுற்றுலா சுற்றுவழித் தடங்கள் மேம்பாட்டின் கீழ் நாட்டில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுதேசி தரிசன திட்டம் என்பதை தொடங்கியது. ரூ.5,290.33 கோடி மதிப்பீட்டில் 76 செயல்திட்டங்கள் இதன் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்தன. நீடித்த நிலையான சுற்றுலாத் தளங்களை மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தத் திட்டம் சுதேசி தரிசன திட்டம் 2.0 என திருத்தி அமைக்கப்பட்டது. இதன்கீழ் ரூ.2,108.87 கோடி மதிப்பிலான 52 செயல்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

சுற்றுலா அமைச்சகமானது பிரசாத் என்கின்ற புனிதப்பயண புத்துணர்வு மற்றும் ஆன்மீக, பாரம்பரிய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1,726.74 கோடி மதிப்பீட்டில் 54 செயல்திட்டங்களை அனுமதித்திருந்தது. மேலும் சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தலங்கள்  மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.648.10 கோடி மதிப்பீட்டில் 36 செயல்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இத்துடன் கூடுதலாக இந்திய அரசு மூலதன முதலீட்டிற்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின்கீழ் நாட்டில் ரூ.3,295.76 கோடி மதிப்பீட்டில் 40 செயல்திட்டங்களுக்கு அனுமதி அளித்திருந்தது.

சுதேசி தரிசன திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்  சுற்றுலாத் தலங்களில் உள்ளூர் சமுதாயத்தினருக்கு சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உருவாக்குவதற்கு ஊக்கம் அளிக்கின்றன. இதேபோன்று மூலதன முதலீட்டிற்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவித்திட்டமானது உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் நீடித்த நிலையான சுற்றுலா செயல்திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

மேலே கூறப்பட்ட திட்டங்களின் கீழ் மத்திய நிதி உதவியின் மூலம் உருவாக்கப்படும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு சொந்தமானதாகும். அவற்றை இயக்குதல் மற்றும் நிர்வாகம் செய்தலும் நீண்டகால அடிப்படையில் வாழ்வாதார பலன்களை உருவாக்குதலும் அவற்றின் பொறுப்பாகும்.

சுதேசி தரிசன திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் மத்திய நிதியின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் பணியை 2019ல் மூன்றாம் தரப்பு ஏஜென்சி மேற்கொண்டது. இத்திட்டமானது உள்ளூர் சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளது என்று எடுத்துக்காட்டியது. சுதேசி தரிசன திட்டம் மற்றும் மூலதன முதலீட்டிற்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவித்திட்டம் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு குறித்து அமைச்சகம் அண்மையில் எந்தவிதமான ஆய்வையும் மேற்கொண்டிருக்கவில்லை. எனினும், இந்தியாவின் சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு நிலைமை கீழ்க்கண்டவாறு உள்ளது:

நிதியாண்டு     மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை (கோடியில்)

2021-22     7.0

2022-23     7.6

2023-24     8.4

இதுமட்டுமல்லாமல் சுற்றுலா அமைச்சகம் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா தொடர்பான குறுகியகாலப் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. கிடைத்துள்ள தகவல்களின்படி நாட்டில் பெண்கள், இளைஞர்கள் உட்பட 5.54 லட்சம் தனிநபர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்தப் பயிற்சியின் விளைவாக இவர்கள் வேலையில் அமர்ந்துள்ளனர், சுயதொழிலைத் தொடங்கி உள்ளனர் மற்றும் தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.

இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார  அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று (21 ஆகஸ்ட் 2025) மாநிலங்களவையில் ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

***

AD/TS/DL


(Release ID: 2159521)
Read this release in: English , Urdu