தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் புகாரை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை
Posted On:
20 AUG 2025 4:06PM by PIB Chennai
ஓடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் 2025 ஆகஸ்ட் 6, அன்று தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து, முன்னாள் ஆண் நண்பர் ஒருவர் தன்னை மிரட்டியதாக எழுந்த புகாரில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அவரது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
செய்தியின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், மனித உரிமைகள் மீறல் தொடர்பான கடுமையான பிரச்சினைகளை எழுப்புவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விசாரணையின் தற்போதைய நிலை உட்பட விரிவான அறிக்கையை அளிக்குமாறு, ஒடிசா காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆகஸ்ட் 7, 2025 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, இளம் பெண் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். முன்னாள் ஆண் நண்பர் ஒருவரால் அவர் தொடர்ந்து மிரட்டப்படுவதாக அவரது தந்தை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் தந்தை சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் மீது எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, இந்த விஷயத்தை மேற்கொண்டு தொடரவேண்டாம் என்றும் அவருக்கு ஒரு காவல்துறை அலுவலர் அறிவுரை அளித்ததாகவும், மிரட்டியவரின் தொலைபேசி எண்ணை தடுத்து வைத்து விட ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
.
***
AD/SM/DL
(Release ID: 2158713)