கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திய கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை டிஜிட்டல் முறையில் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்
Posted On:
18 AUG 2025 4:03PM by PIB Chennai
பண்டைய இந்திய கையெழுத்துப் பிரதிகள், கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்கள், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட காணொலி ஆவணங்கள் மற்றும் ஆவணக் காப்பகப் பொருட்களின் டிஜிட்டல் மயமாக்கி பாதுகாப்பதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் கீழ் உள்ள பல்வேறு அமைப்புகள் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன:
தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் திட்டத்தின் (என்எம்எம்ஏ) கீழ் 1,18,359 தொல்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏஎஸ்ஐ) டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தியுள்ளது.
இந்திய கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல் மற்றும் பாதுகாத்தல் என்ற முக்கிய நோக்கத்துடன் 'ஞான பாரதம் இயக்கத்தின்' கீழ், 37 பொது அல்லது தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 3.50 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
புனேவில் உள்ள C-DAC- உடன் தொழில்நுட்ப ரீதியாக இணைந்து கலாச்சார அமைச்சகம் அருங்காட்சியக திரட்டுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக “JATAN” என்ற மென்பொருளைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவின் வரலாற்று மரபுரிமைச் செல்வத்திற்கான நுழைவாயிலாக செயல்படும் அபிலேக் படல் என்பது இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தால் (என்ஏஐ) நிர்வகிக்கப்படும் ஒரு டிஜிட்டல் களஞ்சியமாகும். இது மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவுகளின் புதையலாக திகழ்கிறது.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தேசிய கலாச்சார காணொலிக் காப்பகம் (என்சிஏஏ) அரிய மற்றும் அழிந்து வரும் கலாச்சார காணொலி பதிவுகளுக்கான நம்பகமான டிஜிட்டல் களஞ்சியமாக விளங்குகிறது.
இந்தியா முழுவதும் ஏழு மண்டல கலாச்சார மையங்கள் (இசட்சிசி) பட்டியாலா, பிரயாக்ராஜ், கொல்கத்தா, திமாபூர், தஞ்சாவூர், நாக்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய இடங்களில் தலைமையகங்களைக் கொண்டு செயல்படுகின்றன. இவை இசை, நடனம், நாடகம், இலக்கியம் மற்றும் நுண்கலைகளை உள்ளடக்கிய காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி மற்றும் காணொலி வாயிலாக ஆவணப்படுத்தும் பணிகளைச் செய்கின்றன.
இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை டிஜிட்டல் தளங்கள் மூலம் மேம்படுத்த கலாச்சார அமைச்சகம் பின்வரும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது, இதில் ஆன்லைன் கண்காட்சிகள், மெய்நிகர் அருங்காட்சியகங்கள் கலாச்சார விழாக்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளின் தொடர் நேரலை ஆகியவை அடங்கும்:
கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகம், தேசிய கலாச்சார நிதியத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் (ஏஏஐ) இணைந்து செயலி அடிப்படையிலான மெய்நிகர் அருங்காட்சியகத்தை உருவாக்குவதன் மூலம் விரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேசிய மெய்நிகர் நூலகம் (என்விஎல்ஐ) இந்தியாவில் உள்ள அனைத்து கலாச்சார தகவல்களையும் ஒன்றிணைத்து, பயனர் இணக்க, பன்மொழி தேடல் இடைமுகங்கள் வாயிலாக குடிமக்களுக்கு அத்தகைய தகவல்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான தளமாக விளங்குகிறது. இது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு களஞ்சியங்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து பொருத்தமான கலாச்சார தரவை வழங்குகிறது.
மேலும், அமைச்சகம் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் கண்காட்சிகள், கலாச்சார விழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் பிற சாதனைகள் உள்ளிட்டவற்றை பொது மக்களிடையே கொண்டு சேர்க்கிறது.
கலாச்சார அமைச்சகம் அதன் பல்வேறு அமைப்புகள் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஆன்லைன் கற்றல் தளங்களுடன் இந்திய கலாச்சாரக் கல்வியை ஒருங்கிணைப்பதற்கான பின்வரும் திட்டங்களை செயல்படுத்துகிறது:
1. நூற்றாண்டுகள் மற்றும் ஆண்டுவிழாக்கள் திட்டம்
2. கலை மற்றும் பண்பாடு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குரு சிஷ்ய பரம்பரையை ஊக்குவித்தல்
3. அருங்காட்சியகங்களின் மேம்பாடு
4. நூலகங்களின் மேம்பாடு
5. உலகளாவிய ஈடுபாடு
6. தேசிய கையெழுத்துப் பிரதிகள் இயக்கம் (ஞான பாரதம் இயக்கம்)
7. தேசிய கலாச்சார முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய பார்வை மற்றும் குறிக்கோளை எட்டும் உத்திகள் இயக்கம்
இந்தத் தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2157465)
AD/SM/DL
(Release ID: 2157651)