திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
ஐடிஐ-களின் தரநிலையை உயர்த்துவதற்கான தேசிய திட்டம் குறித்த பயிலரங்கு ஒடிசாவில் நடைபெற்றது
Posted On:
13 AUG 2025 11:57AM by PIB Chennai
தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை (ஐடிஐகளை) தரம் உயர்த்துதல் மற்றும் நவீனப்படுத்துதலை தேசிய அளவில் ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஒடிசா அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வித்துறை ஒத்துழைப்புடன் நேற்று புவனேஸ்வரில் ஐடிஐ தரநில உயர்த்தலுக்கான தேசியத்திட்டம் குறித்த ஆலோசனைப் பயிலரங்கை நடத்தியது. இந்தப் பயிலரங்கில் ஐடிஐ தரநிலை உயர்த்தலுக்கான தேசியத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை, கட்டமைப்பு, செயல்படுத்தலுக்கான சட்டகவரைவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதுடன் தொழிற்சாலை, கல்வி நிலையங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து கருத்துக்களும் சேகரிக்கப்பட்டன. இந்தப் பயிலரங்கில் ஒடிசாவில் ஐடிஐ-களின் வளர்ச்சிப் பயணம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
உயர்தரமான மற்றும் சந்தைக்குத் தேவையான தொழில்திறன்களுடன் இந்தியாவின் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தத் திட்டத்தின் பங்கினை திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் செயலாளர் திரு ரஜ்ஜித் புன்ஹானி எடுத்துரைத்தார். ஐடிஐ தரநிலை உயர்த்தலுக்கான தேசியத் திட்டம் என்பது உள்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துவது மட்டுமின்றி, இது இந்தியாவில் தொழில்துறை சார்ந்த பயிற்சிகளின் அடிப்படையையே மறுவரையறை செய்வதாகும் என்று அவர் மேலும் கூறினார்.
மத்திய அமைச்சரவை கடந்த மே 7, 2025 அன்று ரூ.60,000 கோடி ஒதுக்கீட்டில் ஐடிஐ தரநிலை உயர்த்தலுக்கான தேசியத் திட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது. 5 ஆண்டு காலகட்டத்தில் நாடு முழுவதும் ஆயிரம் ஐடிஐ-க்களை தரநிலை உயர்த்துவதற்காக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை பயிற்சிக் கல்வியை உலகத்தரத்தில் நவீன பாடத்திட்டத்துடன் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கேற்ப வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.
இந்தத் திட்டத்திற்கான நிதிஒதுக்கீடு மூன்று அடுக்கு மாதிரியில் இருக்கும். அதாவது மத்திய அரசு ரூ. 30,000 கோடியும், மாநில அரசுகள் ரூ.20,000 கோடியும் தொழில்துறை ரூ.10,000 கோடியும் வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 200 மைய ஐடிஐ-கள் அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் புத்தாக்க மையங்களுடன் தரநிலை உயர்த்தப்படும்.
இப்பயிலரங்கில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் திருமதி சோனல் மிஸ்ரா, புவனேஸ்வரில் உள்ள உலகத் தொழில் திறன் மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி ரஷ்மிதா பாண்டா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2155944 )
AD/TS/SG
(Release ID: 2156048)