அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கருந்தேள் விஷத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் கண்டறியப்பட்டது
Posted On:
05 AUG 2025 3:18PM by PIB Chennai
கிழக்கு மற்றும் தென்னிந்திய காடுகளில் புதர்களினூடே அமைதியாக ஊர்ந்து செல்லும் பளபளப்பான ஆபத்தான கருந்தேளின் கொட்டுதல் காரணமாக உடலில் ஏறும் விஷம் குறித்த ரகசியத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் தேளின் விஷம் காரணமாக ஏற்படும் கணிசமான இறப்பு மற்றும் நோயுறுதல் தன்மையைக் கருத்தில் கொள்ளும் போது இது உலகளாவிய சுகாதாரப் பிரச்சனையாக உள்ளது. கருந்தேள் எங்கும் நிறைந்து காணப்பட்ட போதிலும் இதன் விஷத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், இது தொடர்பான குறைந்தபட்ச அறிவியல் ஆய்வுகளே நடைபெற்றுள்ளன. அதன் விஷக் கலவை, நச்சுத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த உயிரியல் முக்கியத்துவம் பற்றிய புரிதல் மிக குறைவாகவே இருந்து வந்துள்ளது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண, குவாஹத்தியில் உள்ள மேம்பட்ட ஆய்வு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஹெட்டெரோமெட்ரஸ் பெங்காலென்சிஸ் விஷத்தின் விரிவான பகுப்பாய்வை உணர்த்தியது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் ஆஷிஸ் கே. முகர்ஜி மற்றும் ஆராய்ச்சி அறிஞர் திருமதி சுஸ்மிதா நாத் உள்ளிட்டோர் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தேள் செலுத்தும் விஷத்தில் பொதிந்துள்ள எட்டு வெவ்வேறு புரதக் குடும்பங்களைச் சேர்ந்த 25 தனித்துவமான நச்சுகள் இந்த தேள் கொட்டுவதால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தனர்.
நிறமாலை அளவியல் எனப்படும் ஸ்பெக்ட்ரோமெட்ரி மற்றும் உயிர்வேதியியல் பகுப்பாய்வுகள் கருந்தேள் விஷத்தில் உள்ள 8 புரதக் குடும்பங்களிலிருந்து 25 முக்கிய நச்சுக்களை அடையாளம் கண்டன. ஆராய்ச்சியாளர்கள் சுவிஸ் அல்பினோ எலிகளில் மருந்தியல் விளைவுகளை மேற்கொண்டனர், மேலும் ஒட்டுமொத்த உடலில் பாதிப்பு, அதிகரிக்கும் கல்லீரல் நொதிகள், உறுப்பு சேதம் மற்றும் உடலில் ஒரு வலுவான மற்றும் குறிப்பிடத்தக்க அழற்சி எதிர்வினை, ஆகிவற்றிற்கு வழிவகுக்கும் என்பதைக் கண்டறிந்தனர்.
விஷம் எலிகளின் உறுப்புகளில் நுழைந்தவுடன் அதன் உடல் முழுவதிலும் ஒரு நச்சுப் புயலைத் தூண்டியது. கல்லீரல் நொதி அளவுகள் கடுமையான வேகத்தில் உயர்ந்தன. இது கல்லீரல் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. உறுப்புகள் சேதத்தின் அறிகுறிகளைக் காட்டின, எல்லாவற்றிற்கும் மேலாக, நோயெதிர்ப்பு அமைப்பு உயர் இயக்கத்திற்குச் சென்றது – கருந்தேள் கொட்டுதல்களால் ஏற்படும் அசாத்தியமான அதிர்ச்சி அல்லது கடுமையான ஒவ்வாமை நிலையைக் குறிக்கும் ஒரு அழற்சி எதிர்ப்பு எதிர்வினையை அதிகரித்தது.
சர்வதேச உயிரியல் பெருமூலக்கூறுகள் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, குறைவாக அறியப்பட்ட ஒரு இனத்தை ஆராய்வதன் மூலம் தேள் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க மேம்பட்ட புரிதலை வழங்குகிறது மற்றும் விஷம் மற்றும் அதன் மேலாண்மை குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு ஒரு புரிதலை நிறுவுகிறது.
---
(Release ID: 2152479)
AD/SM/KR
(Release ID: 2152643)