விவசாயத்துறை அமைச்சகம்
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், விரிவான விவசாய மேம்பாட்டுத் தரவைப் பகிர்ந்து கொண்டார்
Posted On:
29 JUL 2025 7:45PM by PIB Chennai
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், நாட்டின் விவசாய நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்கினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பிரச்சாரம் சீராக முன்னேறி வருவதை எடுத்துக்காட்டும் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
விவசாய மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்ட ஆறு முக்கிய நடவடிக்கைகளாக அமைச்சர் குறிப்பிட்டவை, பின்வருமாறு:
*உற்பத்தியை அதிகரித்தல்
*விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உள்ளீட்டு செலவுகளைக் குறைத்தல்
*பண்ணை விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்தல்
*நஷ்டங்கள் ஏற்பட்டால் போதுமான இழப்பீடு வழங்குதல்
*பழங்கள், காய்கறிகள், மருத்துவ தாவரங்கள், வேளாண் காடுகள், மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாய பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல்
*எதிர்கால சந்ததியினருக்கு மண்ணைப் பாதுகாக்க இயற்கை விவசாயம் மற்றும் உரங்களின் சீரான பயன்பாட்டை ஊக்குவித்தல்
கடந்த 10 ஆண்டுகளில், பயிர் உற்பத்தி 246.42 மில்லியன் டன்னிலிருந்து 353.96 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்று திரு. சவுகான் கூறினார். பருப்பு வகைகளின் உற்பத்தி 16.38 மில்லியன் டன்னிலிருந்து 25.24 மில்லியன் டன்னாகவும், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 27.51 மில்லியன் டன்னிலிருந்து 42.61 மில்லியன் டன்னாகவும் அதிகரித்துள்ளது. தோட்டக்கலை உற்பத்தியும் 280.70 மில்லியன் டன்னிலிருந்து 367.72 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டில் பால் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க விவசாயிகளால் இயக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் வருமானம் குறித்த பிரச்சினையில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வேளாண் பட்ஜெட்டான ரூ.27,000 கோடியுடன், தற்போதைய ஒதுக்கீட்டான ரூ.1.27 லட்சம் கோடியை ஒப்பிடும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கீழ் பல விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கியுள்ளனர் என்று திரு சவுகான் தெரிவித்தார். பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம், 10 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கிறது என்றும், மத்திய அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.2 லட்சம் கோடி உர மானியங்களை வழங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக, குறைந்தபட்ச ஆதரவு விலைகளில் செலவை விட குறைந்தபட்சம் 50% லாபத்தை உறுதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது பெரிய அளவிலான கொள்முதல் நடைபெற்று வருகிறது, மேலும் விவசாயிகள் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு பெற்று வருகின்றனர். யூரியா மற்றும் டையம்மோனியம் பாஸ்பேட் போன்ற மானிய விலை உரங்களும் பரவலாகக் கிடைக்கின்றன என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149919
***
(Release ID: 2149919)
AD/RB/DL
(Release ID: 2149957)