தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இ-ஷ்ரம் வலைதளத்தில் பதிவுசெய்யப்பட்ட 30.95 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள்
Posted On:
28 JUL 2025 5:21PM by PIB Chennai
ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகஸ்ட் 26, 2021 அன்று இ-ஷ்ரம் வலைதளத்தை (eshram.gov.in) அறிமுகப்படுத்தியது. இ-ஷ்ரம் வலைதளம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சுய அறிவிப்பு அடிப்படையில் ஒரு உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) வழங்குவதன் மூலம் அவர்களைப் பதிவுசெய்து ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 22, 2025 நிலவரப்படி, 30.95 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏற்கனவே இ-ஷ்ரம் வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அணுகுவதற்காக, இ-ஷ்ரம் வலைதளத்தை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு தீர்வாக மேம்படுத்துவது குறித்த 2024-25 பட்ஜெட் அறிவிப்பின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 21 அக்டோபர் 2024 அன்று இ-ஷ்ரம் வலைதளம்- "ஒரே இடத்தில் தீர்வு" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது பல்வேறு சமூகப் பாதுகாப்பு/நலத் திட்டங்களை ஒரே வலைதளத்தில் அதாவது இ-ஷ்ரம் இல் ஒருங்கிணைப்பதை உள்ளடக்குகிறது. இது இ-ஷ்ரம் இல் பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அணுகவும், இதுவரை அவர்கள் பெற்ற நன்மைகளை இ-ஷ்ரம் மூலம் பார்க்கவும் உதவுகிறது.
இதுவரை, பல்வேறு மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் பதினான்கு (14) திட்டங்கள் ஏற்கனவே இ-ஷ்ரம்முடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் சாலையோர விற்பனையாளர்களுக்கான ஸ்வநிதித் திட்டம், பிரதமர் விபத்து காப்பீட்டுத் திட்டம் பீமா யோஜானா, பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமர் கிராமப்புற வீட்டு வசதி திட்டம், ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் மக்கள் ஆரோக்கியத் திட்டம், பிரதமரின் மீனவர் நலத் திட்டம், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டம், ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு மற்றும் பிரதமர் மகப்பேறு நலத்திட்டம் ஆகிய சமூகப் பாதுகாப்பு, காப்பீடு அல்லது திறன் மேம்பாட்டுத் திட்டங்களை இந்த வலைத் தளம் ஒருங்கிணைத்துள்ளது.
இந்தத் தகவலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லாஜே இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2149351)
AD/SM/DL
(Release ID: 2149467)