ஜல்சக்தி அமைச்சகம்
குடிநீரில் ஃப்ளோரைடு அளவு அதிகம் இருப்பதை கண்டறிந்து மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்கிறது ஜல் சக்தி அமைச்சகம்
Posted On:
28 JUL 2025 1:48PM by PIB Chennai
கிராமப்புற வீடுகளுக்கு போதுமான அளவு, பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் வழக்கமான மற்றும் நீண்ட கால அடிப்படையில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து, ஜல் ஜீவன் இயக்கம் (ஜேஜேஎம்) – ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீர் இயக்கம், ஆகஸ்ட், 2019 இல் தொடங்கப்பட்டது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, குழாய் நீர் விநியோகத் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நீரின் தரத்திற்கான அளவுகோலாக இந்திய தரநிர்ணய அமைவனத்தின் BIS:10500 தரநிலைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. குடிநீர் மாநிலப் பொருள் பட்டியலில் இருப்பதால், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் உள்ளவை உட்பட, குடிநீர் விநியோகத் திட்டங்களைத் திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல், செயல்படுத்துதல், நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றின் பொறுப்பு மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் இந்திய அரசு மாநிலங்களை ஆதரிக்கிறது.
ஜே.ஜே.எம்.-இன் கீழ், வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்கான நீர் வழங்கல் திட்டங்களைத் திட்டமிடும்போது, ஃப்ளோரைடு உள்ளிட்ட ரசாயன மாசுபாடுகளால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தரமான குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. நீர் தரப் பிரச்சினைகள் உள்ள கிராமங்களுக்கு பாதுகாப்பான மாற்று நீர் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட குழாய் நீர் விநியோகத் திட்டங்களை செயல்படுத்துமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, பல ஆண்டுகளாக ஃப்ளோரைடு பாதிக்கப்பட்ட குடியிருப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஜே.ஜே.எம்.-இன் கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், குறிப்பாக ஆர்சனிக் மற்றும் ஃப்ளோரைடு பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீரை வழங்குவதற்காக, சமூக நீர் சுத்திகரிப்பு நிலையங்களை (CWPPs) நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஜே.ஜே.எம். தரநிலைகளுக்கு இணங்க குழாய் நீர் விநியோகத் திட்டங்கள் தொடங்கப்படும் வரை குடிநீர் மற்றும் சமையல் தேவைகளுக்கு 248 குடியிருப்புகள் அனைத்திற்கும் சமூக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்/தனிப்பட்ட வீட்டு சுத்திகரிப்பான்கள் (CWPPs/IHPs) மூலம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 8-10 லிட்டர் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் ஃப்ளோரைடு மாசுபாடு இல்லாத பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.
அதிகப்படியான ஃப்ளோரைடு கொண்ட உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படும் நோயான ஃப்ளோரோசிஸ் பிரச்சினையைச் சமாளிக்க இந்திய அரசு தேசிய ஃப்ளோரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (NPPCF) செயல்படுத்தி வருவதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) தெரிவித்துள்ளது. ஜூன், 2025 நிலவரப்படி, 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 163 மாவட்டங்களில் NPPCF செயல்படுத்தப்பட்டு வருகிறது,
இந்தத் தகவலை ஜல் சக்தி துறையின் இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2149210)
AD/SM/KR/DL
(Release ID: 2149439)