சுற்றுலா அமைச்சகம்
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது: மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
Posted On:
28 JUL 2025 3:27PM by PIB Chennai
கண்காட்சிகள் மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்வதற்காக மாநில அரசுகளுக்கு உதவி செய்தல், இணையதளம், சமூக ஊடகங்கள், விளம்பர நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் சுற்றுலா அமைச்சகம் நாட்டின் சுற்றுலா தலங்கள் மற்றும் இந்திய தயாரிப்புகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் பல்வேறு திட்டங்களின் கீழ் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் அமைச்சகம் மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு சுற்றுலா உள்கட்டமைப்பு திட்டங்களின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், 2023-24-ம் நிதியாண்டில் தமிழகத்தில் ராமேஸ்வரம் மேம்பாட்டிற்காக ரூ.2,001.24 லட்சம் செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மூலதன முதலீட்டுக்காக மாநிலங்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு உதவியின் கீழ், மாமல்லபுரத்தில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா மேம்பாட்டிற்காக ரூ. 99.67 கோடியும், தேவாலா மலர் தோட்டத்திற்காக ரூ. 70.23 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரசாத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 2024-25-ம் நிதியாண்டில் 8 நவக்கிரக கோயில்களின் மேம்பாட்டிற்காக ரூ.40.94 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 1147.5 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நாட்டிய திருவிழாவுக்காக 2022-23, 2023-24, 2024-25-ம் நிதியாண்டில் தலா 25 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024-25-ம் நிதியாண்டில் சென்னை மார்கழி இசை திருவிழாவிற்கு 25 லட்சம் ரூபாயும், மதுரை பொங்கல் திருவிழாவிற்கு 30 லட்சம் ரூபாயும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149252
***
AD/SM/IR/RJ/KR
(Release ID: 2149327)