தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பணியிடத்திலும் பொது இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்த தேசிய கருத்தரங்கு

Posted On: 27 JUL 2025 1:07PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), லக்னோ பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையுடன் இணைந்து, 2025 ஜூலை 26 அன்று 'பணியிடத்திலும் பொது இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. 2024 செப்டம்பர் 9 அன்று நடைபெற்ற முதல் கருத்தரங்கைத் தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது தேசிய கருத்தரங்கம் இதுவாகும். நாடு முழுவதும் தொழில்முறை சூழல்களிலும் பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதில் காணொலி மூலம் உரையாற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கிட்டத்தட்ட 51 புகார்கள் பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் -2013, இயற்றப்பட்டதன் பின்னணியை அவர் நினைவு கூர்ந்தார். பெண்களின்  பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்வதற்காக மேம்பட்ட விழிப்புணர்வு, வலுவான அமலாக்க வழிமுறைகள், முறையான மாற்றங்கள் ஆகியவை தேவை என்று நீதிபதி ராமசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைச் செயலாளர் திருமதி சைடிங்புய் சக்சுவாக், கருத்தரங்கின் அவசியத்தை விளக்கினார். லக்னோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.கே.சௌத்ரி, சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ளன என்பதை எடுத்துரைத்தார். இருப்பினும், விழிப்புணர்வு மட்டும் போதாது எனவும் குற்றங்கள் குறித்து புகாரளிக்கும் துணிச்சல் மக்களுக்கு இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். லக்னோ பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் பி.கே. குப்தா, பெண்களுக்கு எதிரான குடும்பக் குற்றங்கள் அதிகமாக இருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட சில முக்கிய பரிந்துரைகள்:

1. கொள்கை வகுத்தல், செயல்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய மூன்றிலும் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.

2. பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடல்களில் முறைசாரா துறையைச் சேர்ப்பதற்கான தேவை உள்ளது. குறிப்பாக முறைசாரா துறையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குத் தேவை உள்ளது.

3. பணியிடத்திலும் பொது இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்படுவதற்கு தனிநபர் மற்றும் குடும்ப நிலையில் விழிப்புணர்வு தேவை.

******

(Release ID: 2149025)

AD/PLM/RJ


(Release ID: 2149060) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi