கலாசாரத்துறை அமைச்சகம்
ஜார்க்கண்டின் சோஹ்ராய் கலை இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
Posted On:
26 JUL 2025 5:12PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற கலை உத்சவ நிகழ்ச்சியில் ஜார்க்கண்டின் பாரம்பரியமான சோஹ்ராய் கலை முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த பத்து நாள் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்தியாவின் வளமான நாட்டுப்புற, பழங்குடி கலை மரபுகளைக் கொண்டாடுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கண்காட்சியைப் பார்வையிட்ட குடியரசுத்தலைவர், கலைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த கலைப்படைப்புகள் இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கின்றன என்றார். இயற்கையுடனான நமது தொடர்பு ஆழமானது என அவர் கூறினார். இந்த விலைமதிப்பற்ற மரபுகளை நிலைநிறுத்தும் கலைஞர்களைப் பாராட்டுவதாக அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA-ஐஜிஎன்சிஏ) உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த ஜோஷி, பிராந்திய இயக்குநர் டாக்டர் குமார் சஞ்சய் ஜா, ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர் திருமதி சுமேதா சென்குப்தா உள்ளிட்டோர் நிறுவனத்தின் சார்பாக கலந்து கொண்டனர்.
ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர்களான திருமதி போலோ குமாரி ஓரான், திரு பிரபாத் லிண்டா, டாக்டர் ஹிமான்ஷு சேகர் ஆகியோர், கலைஞர் குழுவை ஒருங்கிணைப்பதிலும், 2025 ஜூலை 14 முதல் 24 வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நிர்வகிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தனர்.
ஜார்க்கண்டில் உள்ள பழங்குடி சமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் சுவர் ஓவிய பாரம்பரியமான சோஹ்ராய் ஓவியங்கள், அறுவடைக் காலங்களிலும் பண்டிகைக் காலங்களிலும் அதிக அளவில் பெண்களால் வரையப்படுகிறது. இதில், இயற்கை மண் நிறமிகள், மூங்கில் தூரிகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி துடிப்பான சித்திரங்கள் வரையப்படுவது வழக்கமாகும். பத்து நாள் நிகழ்ச்சியில் இந்த ஓவியக் கலைஞர்கள் பங்கேற்று தங்கள் பாரம்பரிய கலைத்திறனை தேசிய அளவில் காட்சிப்படுத்தினர்.
ஜார்க்கண்டின் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த சோஹ்ராய் கலைஞர்களை அடையாளம் கண்டு, ஒருங்கிணைத்து, ஆதரிக்கும் இந்த கலாச்சார முயற்சியில் ஐஜிஎன்சிஏ பிராந்திய மையம் முக்கிய பங்கு வகித்தது.
***
(Release ID: 2148875)
AD/PLM/SG
(Release ID: 2148916)