சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறு மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
24 JUL 2025 4:05PM by PIB Chennai
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறு மருத்துவ படிப்பை முடித்த மாணவர்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் அழைப்பு விடுத்துள்ளார். புதுதில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று இன்று உரையாற்றிய அவர், இத்தகைய ஆய்வின் மூலம் நாட்டு மக்களுக்கு எளிதாக சிகிச்சை கிடைப்பதை அதிகரிக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மருத்துவப் படிப்பை நிறைவு செய்துள்ள மாணவர்கள், லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றும் மதிப்புமிக்க சேவையை நாட்டுக்கு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் வகையில் கருணைமிக்க மருத்துவர்களாக திகழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடமையும், பொறுப்புணர்வும் கலந்த தனித்துவமானது மருத்துவத் தொழில் என்று குறிப்பிட்ட அவர், இதனால் சமூகத்தில் மருத்துவர்களுக்கு உயர்ந்த மதிப்பு உள்ளது என்றும் கூறினார். சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு சேவை செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா போன்ற பெரிய நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் தரமான, குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்ய மத்திய அரசு அயராது பாடுபடுகிறது என்று திருமதி அனுப்பிரியா படேல் கூறினார். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதம் அளவுக்கு சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேசிய சுகாதார கொள்கையில் குறிப்பிட்டுள்ளது போல் இதனை 2.5 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தும் இலக்கை நோக்கி மத்திய அரசு செயல்படுகிறது என்றார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத்குமார் பால், பொது மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் டாக்டர் சுமிதா சர்மா, லேடி ஹார்டிங் மருத்துவக்கல்லூரி இயக்குநர் டாக்டர் சரிதா பேரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 600-க்கும் அதிகமான மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147755
***
AD/SMB/AG/KR
(Release ID: 2147886)