ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை இந்தியா இயக்கத்திற்கு சென்ற நிதியாண்டில் ரூ.3622 கோடி ஒதுக்கீடு

Posted On: 24 JUL 2025 1:42PM by PIB Chennai

தூய்மை இந்தியா இயக்கம் நகரம் மற்றும் கிராமம் என இரண்டிலும் 2014 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா இயக்கத்திற்கு  (கிராமம்) 2014-15ஆம் ஆண்டில் மத்திய அரசின் பங்கு ரூ.2849.95 கோடியாக இருந்தது.  2024-25-ல் இது ரூ.3622 கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் 15-7-2025 முடிய மத்திய அரசின் பங்கு ரூ.603.15 கோடி ஆகும்

இதேபோன்று, தூய்மை இந்தியா இயக்கத்திற்கு (நகரம்) 2014-15ஆம் ஆண்டில் மத்திய அரசின் பங்கு ரூ.859.48 கோடி ஆகும். 2024-25ல் இது ரூ.1892.86 கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் 18-7-2025 முடிய மத்திய அரசின் பங்கு ரூ.165.40 கோடி* ஆகும். (*செப்டம்பர் 2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திருத்தப்பட்ட எஸ்.என்.ஏ-ஸ்பார்ஷ் மாதிரியின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.2069 கோடி அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதில் ரூ.146.26 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செலவு ரூ.19.14 கோடியும் அடங்கும்.)

2023-24க்கான தூய்மை கிராம கணக்கெடுப்பானது இந்தியா முழுவதிலும் உள்ள 729 மாவட்டங்களில் 17,304 கிராமங்களிலும் மற்றும் இந்தக் கிராமங்களில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், பொதுச் சுகாதார மையங்கள் உள்ளிட்ட 85,901 பொதுஇடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. கணக்கெடுப்பு செய்யப்பட்ட வீடுகளில் 95.1 சதவிகிதம் வீடுகள் கழிப்பறை வசதிகளுடன் இருந்தன மேலும் 76.7 சதவிகிதப் பொது இடங்களில் கழிப்பறை வசதிகள் இருந்தன.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் நகரங்களுக்கான வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பு 2016ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 4910 நகராட்சி அமைப்புகளில் 4692 நகராட்சி அமைப்புகள் திறந்த வெளியில் மலம் கழிக்காத (ஓடிஎஃப்) நகராட்சிகளாக சான்று பெற்றுள்ளன.

2014-ம் ஆண்டில் இருந்து கிராமப்பகுதிகளில் இதுவரை 11,90,82,226 தனிநபர் கழிப்பறைகளும் 2,59,982 சமூகச் சுகாதார வளாகங்களும் கட்டித்தரப்பட்டு உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 60,24,612 தனிநபர் கழிப்பறைகளும் 9,091 சமூகச் சுகாதார வளாகங்களும் உள்ளடங்கும். இதேபோன்று நகரப்பகுதிகளில் 63,78,804 தனிநபர் கழிப்பறைகளும் 6,36,826 சமூக மற்றும் பொதுக் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 5,45,101 தனி நபர் கழிப்பறைகளும் 92,744 சமூக மற்றும் பொதுக் கழிப்பறைகளும் உள்ளடங்கும்.

இத்தகவலை ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி.சோமண்ணா மக்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்து உள்ளார்.

***

(Release ID: 2147695)

AD/TS/KR


(Release ID: 2147764)
Read this release in: English , Urdu , Hindi , Bengali