கூட்டுறவு அமைச்சகம்
சர்வதேச கூட்டுறவு ஆண்டுக்கான பிரச்சார இயக்கம்
Posted On:
23 JUL 2025 1:18PM by PIB Chennai
கூட்டுறவு அமைச்சகமானது ஐ.நா, சர்வதேச கூட்டுறவு ஆண்டு – 2025-ஐ ”சிறப்பான உலகத்தை கூட்டுறவுகள் கட்டமைக்கின்றன: என்ற மையக்கருத்தில் கொண்டாடி வருகின்றது. இதனை 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிஏ சர்வதேச கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்திருந்தார். அனைவரையும் உள்ளடக்கல், அனைவரையும் பங்கேற்கச் செய்தல் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சி உள்ளிட்ட குறிக்கோள்களை வளர்த்தெடுப்பதில் கூட்டுறவுகளின் இன்றியமையாத பங்கினை எடுத்துக்காட்டும் வகையில் அமைச்சகமானது பல்வேறு சிறப்பு முன்னெடுப்பு முயற்சிகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
சர்வதேச கூட்டுறவு ஆண்டு-2025ஐ கொண்டாடுவதற்காக ஒரு விரிவான ஆண்டு செயல்திட்டம் கூட்டுறவுத் துறையின் அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனையோடு தயாரிக்கப்பட்டு 24 ஜனவரி 2025ல் மும்பையில் உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரால் வெளியிடப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள், திறன் கட்டமைப்பு திட்டங்கள், பங்குதாரர்களை ஈடுபடுத்தும் முன்முயற்சிகள் போன்ற பலவிதமான நடவடிக்கைகள் இந்தச் செயல்திட்டத்தில் அடங்கியுள்ளன. இந்தச் செயல்திட்டத்தை வெளியிட்ட பிறகு நாடு முழுவதிலும் உள்ள பங்குதாரர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
நாடுதழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்திய ரெயில்வேயின் இ-டிக்கெட்டுகள், அமைச்சகங்கள் / துறைகளின் அதிகாரப்பூர்வமான வலைத்தளங்கள், கூட்டுறவு உற்பத்திப் பொருட்களின் பேக்கேஜிங் (எடுத்துக்காட்டாக பால் பாக்கெட்டுகள்) மற்றும் மகளிர் பிரீமியர் லீக்-2025ன் அனைத்துப் போட்டிகளிலும் சர்வதேச கூட்டுறவு ஆண்டிற்கான லோகோ காட்சிப்படுத்தப்பட்டது. கூட்டுறவுத் துறையின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் குருஷேத்திரா இதழ் சிறப்புப் பதிப்பை (ஜுலை 2025) வெளியிட்டுள்ளது.
தேசிய அளவிலான மிகப்பெரும் நிகழ்ச்சியாக புதுதில்லியில் 30 ஜுன் 2025ல் மாநில கூட்டுறவு அமைச்சர்களின் தேசிய மாநாடானது மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
அமைச்சகம் மேற்கொண்ட முன்முயற்சிகளின் நோக்கம் என்பது அனைவரும் பங்கேற்பதை மேம்படுத்துவதும் கூட்டுறவிற்கான சூழல்சார் அமைப்பை உருவாக்குவதும் ஆகும். வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், பொறுப்புடமையை மேம்படுத்துதல், கூட்டுறவு நடவடிக்கைகளில் இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈடுபடுத்துதல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா மாநிலங்களவையில் ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2147168)
VL/TS/KR/DL
(Release ID: 2147469)