இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாரணாசியில் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும் - திரு மன்சுக் மண்டவியா

Posted On: 19 JUL 2025 6:56PM by PIB Chennai

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 'வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு போதைப் பொருள் இல்லாத இந்தியா' என்ற கருப்பொருளில் 'இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை' மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இன்று (19.07.2025) தொடங்கி வைத்தார். உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சிறப்பு செய்தி பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இது இளைஞர்கள் தலைமையிலான இயக்கத்திற்கு உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குவதாக அமைந்தது. பிரதமர் தமது செய்தியில், "இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு 2025 என்பது வலுவான, விழிப்புணர்வுடன் கூடிய, ஒழுக்கமான இளம் இந்திய தலைமுறையை உருவாக்க முயலும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். போதைப்பொருள் தனிப்பட்ட திறனைத் தடம் புரளச் செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்துகிறது. போதைப்பொருள்களுக்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில், சுய விழிப்புணர்வு, சமூக பங்கேற்பு ஆகியவை நமது வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 120-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு, போதைப் பழக்க அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியாவின் இளைஞர் சக்திக்கு ஒரு தெளிவான அழைப்பாகும்.

அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தமது தொடக்க உரையில், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் பிடியிலிருந்து விடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

இந்த நிகழ்வில் பேசிய மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இந்த உச்சிமாநாடு ஒரு கூட்டு சங்கல்பம் என்று கூறினார். இந்த சங்கல்பத்தை ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தமது உரையில், இந்தியா தற்போது ஆழமான மாற்றத்திற்கான சகாப்தத்தை கடந்து வருவதாகவும், இதுபோன்ற திருப்புமுனைகளின் போது இளைஞர்கள் எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை வரலாறு காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார். கூட்டுக் குடும்ப அமைப்புகளின் சிதைவு காரணமாக, இன்று பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான தனிமை குறித்தும் திரு ஷெகாவத் கவலை தெரிவித்தார். கலாச்சார அம்சங்களை மீட்டெடுப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, போதைப் பொருள்களுக்கு எதிராக அரசின் சமரசமற்ற நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

****

(Release ID: 2146121)

AD/PLM/SG

 


(Release ID: 2146153)