நிதி அமைச்சகம்
புதுதில்லியில் தொழில்துறை டிஜிட்டல் மாற்றத்திற்கான பயிலரங்கு
Posted On:
19 JUL 2025 10:16AM by PIB Chennai
புதுமை மற்றும் ஸ்மார்ட் உற்பத்தியை வளர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, மத்திய நிதி அமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறை , நேற்று புது தில்லியில் தொழில் 4.0 குறித்த பயிலரங்கை நடத்தியது. இந்தப் பயிலரங்கில், எரிசக்தி, மின்சாரம், கட்டுமானம், உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் தொழில் 4.0 தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் அவற்றை விரிவுபடுத்துவதற்கும் உத்திகளைப் பற்றி விவாதிக்க நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்தனர்.
பொது நிறுவனங்கள் துறையின் செயலாளர் திரு. கே. மோசஸ் சாலை, இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்து, நான்காவது தொழில்துறை புரட்சியை ஒரு தேசிய நோக்கமாக ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு , இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் , டிஜிட்டல் ட்வின்ஸ், 3D பிரிண்டிங் மற்றும் 5G-இயக்கப்பட்ட ஸ்மார்ட் உள்கட்டமைப்பு போன்றவற்றை செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பதில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். புரிந்துணர்வு ஒப்பந்த மதிப்பீட்டு கட்டமைப்பில் எதிர்காலத்தில் இணைப்பதற்காக தொழில்துறை 4.0 பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கு முன்கூட்டியே ஏற்றுக்கொள்ளப்படுவது முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயிலரங்கில் நிபுணர் விளக்கக்காட்சிகள் வெளியிடப்பட்டன. பல்வேறு நிபுணர்கள் விவாதங்களில் பங்கேற்றனர். இந்த விவாதங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில்வே, சுரங்கம், சுகாதாரம், கைத்தறி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளில் நான்காம் தொழில் புரட்சி தொழில்நுட்பங்களின் பொருத்தத்தை மீண்டும் உறுதிப்படுத்தின.
செயல்பாட்டு சிறப்பம்சம் மற்றும் நிலையான வளர்ச்சிக்காக தொழில் 4.0-ஐப் பயன்படுத்துவதில் பொதுத்துறை நிறுவனங்களை ஆதரிப்பதில் பொது நிறுவனங்கள் துறை தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. பொதுத்துறை நிறுவனங்களுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தப் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்படும். இது ஆகஸ்ட் 2025-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*****
(Release ID: 2145995)
AD/PKV/SG
(Release ID: 2146046)