விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 JUL 2025 2:48PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், "பிரதமரின் தன்-தான்ய கிருஷி யோஜனா" எனப்படும் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடையாளம் காணப்படும் 100 மாவட்டங்களில், நடப்பு நிதியாண்டு முதல் (2025-26) ஆறு ஆண்டு காலத்திற்கு  செயல்படுத்தப்படும். வேளாண் துறையிலும் அது சார்ந்த துறைகளிலும் விரைவான வளர்ச்சியை எட்டுவது தொடர்பாக இத்திட்டம் கவனம் செலுத்தும். 

இத்திட்டம், வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தல், நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய தானிய சேமிப்புத் திறனை அதிகரித்தல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், விவசாயிகளுக்குக் கடன்கள் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம், மத்திய அரசின் 11 துறைகள், மாநில அரசுகளின் திட்டங்கள், தனியார் துறையினர் ஆகியோரின் கூட்டு ஒத்துழைப்புடன் தற்போது நடைமுறையில் உள்ள 36 திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்தப்படும்.

குறைந்த உற்பத்தித்திறன், குறைந்த பயிர் சாகுபடி, விவசாயிகளுக்குக் குறைந்த கடன் வழங்கல் ஆகியவை உள்ள 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த மாவட்டங்ளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும், மாவட்டங்களின் எண்ணிக்கை நிகர பயிர் பரப்பளவு, நிலங்களின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கும் மாவட்டங்கள் தேர்வு செய்யப்படும். எனினும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தபட்சம் 1 மாவட்டம் தேர்ந்தெடுக்கப்படும்.

 திட்டமிடல், செயல்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றுக்காக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டத்தின் முன்னேற்றம் மாதாந்திர அடிப்படையில் கண்காணிக்கப்படும்.

*****

VL/TS/PLM/KR/DL


(Release ID: 2145324) Visitor Counter : 3