சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கர்நாடகா மாநிலத்தில் 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டுகிறார்
Posted On:
14 JUL 2025 6:04PM by PIB Chennai
கர்நாடகா மாநிலம் சிவமோகாவில் உள்ள சாகரா டவுனில், மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. பி.எஸ். எடியூரப்பா, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில், ₹2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் 88 கி.மீ நீளமுள்ள 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
புதிதாகத் திறக்கப்பட்ட ஷராவதி பாலம், மல்நாடு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்திற்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்துவதுடன், சிகந்தூர் சவுடேஸ்வரி, கொல்லூர் மூகாம்பிகா கோயில்கள் போன்ற முக்கிய புனிதத் தலங்களுக்கான போக்குவரத்து வசதியை எளிதாக்க உதவிடும்.
தேசிய நெடுஞ்சாலை எண் - 367 - ல் 47 கிலோமீட்டர் நீளமுள்ள பிதர்-ஹம்னாபாத் இடையேயான சாலையை அகலப்படுத்தல், கலபுரகி - பிதர் மாவட்டங்களுக்கு இடையிலான பயண நேரத்தை கணிசமான அளவில் குறைத்திடும். தேசிய நெடுஞ்சாலை எண் - 75 - ல் ஷிராடி காட் பகுதியில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள், மழைக்காலத்தின் போது, குறிப்பாக, முக்கியதத்துவம் வாய்ந்த மங்களூரு-பெங்களூரு வழித்தடத்தில் பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்து இயக்கத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாஹாபாத்தில் ஒரு சாலை மேம்பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் - 50 - ல் காகினா ஆற்றின் மீது பாலம் அமைப்பது, கலபுரகி - ராய்ச்சூர் இடையே தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யும். கூடுதலாக, பெங்களூரு - மைசூரு இடையே கட்டுப்பாட்டு விரைவுச் சாலையில் சாலைப் பாதுகாப்பு மேம்பாடுகள் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு இடையே விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்கப் பயணத்தை எளிதாக்குவதுடன், பயண நேரத்தையும், எரிபொருள் பயன்பாட்டையும் கணிசமான அளவில் குறைக்கும்.
***
(Release ID: 2144606)
AD/TS/SM/SV/DL
(Release ID: 2144643)