சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்மைல் திட்டம் குறித்த தேசிய பயிலரங்கு - சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இந்தூரில் நடத்தியது

Posted On: 11 JUL 2025 4:25PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்  அமைச்சகம் இந்தூரில் ஒரு தேசிய பயிலரங்குக்கு இன்று (11.07.2025) ஏற்பாடு செய்திருந்தது. பிச்சையெடுப்பவர்களை அதில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிக்கும் ஸ்மைல் (SMILE) என்ற துணைத் திட்டம் தொடர்பாக இந்த பயிலரங்கில் ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடக்க அமர்வுக்கு துறையின் செயலாளர் திரு அமித் யாதவ் தலைமை வகித்தார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

திரு அமித் யாதவ், தமது உரையில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு விரிவான மறுவாழ்வு  அளிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். பயனுள்ள விளைவுகளுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை, திறன் மேம்பாடு, தரவு சார்ந்த செயல்படுத்தல் ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பிச்சை எடுக்கும் நபர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் குழு விவாதம் நடைபெற்றது.  கள அனுபவங்கள் இதில் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், சிறந்த நடைமுறைகள் குறித்த பயிற்சியுடன் இந்த ஒரு நாள் பயிலரங்கு நிறைவடைந்தது.

2023 அக்டோபரில் தொடங்கப்பட்ட ஸ்மைல் திட்டம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் பிச்சை எடுக்கும் நபர்கள் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாகும். இத்திட்டத்தில் இதுவரை 22,410- க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு 3,400 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.  இத்திட்டத்தின் 3-ம் கட்டம் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 100 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

----

(Release ID: 2144020)

AD/TS/PLM/SG/DL


(Release ID: 2144088) Visitor Counter : 3
Read this release in: English , Urdu , Hindi