புதுதில்லியில் நேற்று நடைபெற்ற 16வது வேளாண் தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், சீரான உரப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு 25 கோடி மண்வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் கிசான் கடன் அட்டைகள் மூலம் பயிர்க் கடன்கள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அரசு தொடர்ந்து விவசாயத் துறையை வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்கிறது என்றும், பிரதமரின் விவசாயிகள் நல நிதி திட்டத்தால் ஏராளமான விவசாய குடும்பங்கள் பயனடைந்துள்ளன என்றும் திரு கோயல் கூறினார். கூடுதலாக, 1,400 மண்டிகள் இ-நாம் (e-NAM) தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, இதனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விலைகள் குறித்த நிகழ்நேர தகவல்களை அணுகவும் சந்தை இணைப்புகளை மேம்படுத்தவும் முடியும் என்று அவர் தெரிவித்தார்.
உரத் துறையில், விவசாயிகள் மலிவு விலையில் உரங்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு கணிசமான மானியங்களை வழங்கியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்திலும், விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உர விநியோகம் உறுதி செய்யப்பட்டது. உலகளாவிய சந்தை நிலை மற்றும் குறைந்து வரும் ஏற்றுமதி போக்குகளுக்கு மத்தியிலும், இந்தியாவின் விவசாயத் துறை குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்திய விவசாயிகளின் முயற்சிகள் மூலம் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வள ஏற்றுமதி ரூ 4 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில், நிலையான விவசாய ஏற்றுமதியானது செயல்திறனுக்கு பங்களித்துள்ளதாக அவர் கூறினார்.
பாஸ்மதி மற்றும் பிற வகையான அரிசி, மசாலாப் பொருட்கள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், தோட்டக்கலை மற்றும் மலர் வளர்ப்பு பொருட்கள், மீன்வளம் மற்றும் கோழிப்பண்ணைத் துறைகள் போன்ற பொருட்களின் உலகளாவிய வெற்றியில் இந்தியாவின் விவசாயிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்று திரு கோயல் கூறினார்.
முன்னோக்கிப் பார்க்கும்போது, விதை உற்பத்தி மற்றும் தரம், இயற்கை விவசாயம் மற்றும் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட நீர்ப்பாசனத்தில் மேலும் வளர்ச்சி ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, இந்திய விவசாயிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதில் முழுமையாக உறுதியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்திய திரு. கோயல், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் விவசாயம் ஒரு முக்கிய உந்துசக்தியாக உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
----
(Release ID 2143691)
AD/TS/PKV/KPG/KR/DL