வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ஆக்ரா புத்துயிர் பெற்று ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை நகராக உருவெடுக்கிறது

Posted On: 10 JUL 2025 11:13AM by PIB Chennai

ஆக்ராவை நச்சுத்தன்மை கொண்ட  குப்பைக் கிடங்கிலிருந்து பசுமையான நகராக மாற்றும் வகையில் குப்பைகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகிய மூன்று கொள்கைகள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இதன் மூலம் தூய்மையான, கழிவுகள் இல்லாத நகரமாக உருவாகும் நோக்கில், ஆக்ரா நகராட்சியானது நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டுக்கு முன்பு, குபேர்பூரில் உள்ள நிலம் வழக்கமான குப்பைக் கிடங்காக இருந்து வந்தது. நகராட்சி மூலம் தினமும் சேகரிக்கப்படும் ஆயிரக்கணக்கான டன் திடக்கழிவுகள் இங்கு கொட்டப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக, இந்தக் குப்பைக் கிடங்கு நகரின் சுற்றுச்சூழலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துவதாக இருந்து வந்தது.

2019-ம் ஆண்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதல் காரணமாக, ஆக்ரா நகராட்சியானது திடக்கழிவை அகற்றுவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.  துறை சார்ந்த நிபுணர்களின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், திடக்கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடங்கின. இந்த முயற்சி தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டது.

இருப்பினும்,  திடக்கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்களுக்கு முழுமையான தீர்வு காணமுடியாத நிலை இருந்தது. இதனையடுத்து 2019-ம் ஆண்டில் 300 டன் (நாள் ஒன்றுக்கு)  கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டது. பின்னர் இதன் உற்பத்தித் திறன் 500 டன்களாக விரிவுபடுத்தப்பட்டது. 2023-ம் ஆண்டு ஆக்ரா நகராட்சி நகர்ப்புறங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளை முற்றிலுமாக அகற்றி, ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை நகரமாக மேம்படுத்தத் தீர்மானித்தது.

இதனை செயல்படுத்தும் வகையில் நகர்ப்பகுதி முழுவதும் 405 டன் ஒருங்கிணைந்த திறன் கொண்ட நான்கு மீட்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வீடு தோறும் சென்று கழிவுகளைப் பிரித்து சேகரிக்கும் முறையும் கட்டாயமாக்கப்பட்டது.

இது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஆக்ரா மாநகராட்சியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் புதுமையான முயற்சி, நகர்ப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் இலக்குகளுடன் உறுதியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   திடக்கழிவு மேலாண்மை, கழிவுக் கிடங்குகளாக உள்ள நிலங்களை மீட்டெடுப்பது, நகர்ப்புற அழகுபடுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக ஆக்ரா நகர்ப்பகுதி ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மையில் சிறந்த முன் உதாரணமாக மாறிவருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143633  

----

AD/TS/SV/KPG/KR


(Release ID: 2143681)
Read this release in: Urdu , English , Hindi