கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளின் இரண்டாண்டு கொண்டாட்டங்கள்

Posted On: 10 JUL 2025 9:44AM by PIB Chennai

பாரத கேசரி டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளின் இரண்டாண்டு அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களை கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் தொழில்துறை பயணத்தை வடிவமைத்த தொலைநோக்கு கொண்ட தலைவரின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தில்லியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், தேசிய ஒற்றுமைக்கான டாக்டர் முகர்ஜியின் வாழ்நாள் முயற்சிகளையும், இன்றைய இந்தியா அவர் ஒரு காலத்தில் கண்ட கனவை எவ்வாறு நிறைவேற்றி வருகிறது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

 “இன்று காஷ்மீரில் உள்ள லால் சௌக்கில் மூவண்ணக்கொடி யாத்திரைகள் அச்சமின்றி மேற்கொள்ளப்படுவதைப் பார்த்து அவரது ஆன்மா திருப்தி அடையும்.  நிச்சயமாக, இந்தியாவின் அனைத்து சட்டங்களும் இப்போது காஷ்மீரில் முழுமையாக செயல்படுத்தப்படுவதைக் கண்டு அவரது ஆன்மா அமைதியடையும்.  இன்று, ஒரே நாடு, ஒரே கொடி மற்றும் ஒரே அரசியலமைப்பு" உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

 ஒன்றுபட்ட மற்றும் வளர்ந்த இந்தியாவுக்காக, டாக்டர் முகர்ஜி வகுத்த தொலைநோக்குப்  பார்வைக்கு வடிவம் கொடுக்க, தற்போதைய மோடி அரசு அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்றும் அவர் கூறினார்.

காஷ்மீரின் ஜம்முவின் உதம்பூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளுக்கான மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தனது உரையில், டாக்டர் முகர்ஜியின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தைப் பற்றிப் பேசினார் - "அவர் சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளில் ஒருவர். ஆங்கிலேயர்கள் கூட அவரது அசாதாரணமான திறமையையும் புத்திசாலித்தனத்தையும் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவரை உண்மையிலேயே வேறுபடுத்திக் காட்டியது அவரது ஆளுமையின் பரந்த தன்மைதான்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கையையும் மரபையும் பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் உயிர்ப்பித்துக் காட்டும் சிறப்புப் பகுதிகள் இடம்பெற்றன.

டாக்டர் முகர்ஜியின் தனிப்பட்ட பயணம், சித்தாந்த பங்களிப்புகள் மற்றும் இந்தியாவின் ஜனநாயக மற்றும் தொழில்துறை நிலப்பரப்பை வடிவமைப்பதில் அவரது பங்கை ஆழமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் பார்க்கும் வகையில் ஒரு சிறப்பு கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. அரிய புகைப்படங்கள், காப்பக ஆவணங்கள் மற்றும் மல்டிமீடியா காட்சிகள் மூலம், கண்காட்சி அவரது ஆரம்பகால தாக்கங்கள், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் பார்வையை விவரித்தது.

டாக்டர் முகர்ஜி தேசத்திற்கு  ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைச்சகத்தால் ஒரு நினைவு முத்திரை மற்றும் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த குறியீட்டு வெளியீடுகள் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை மற்றும் மரபின் நீடித்த நினைவுச்சின்னமாகவும், தேசிய அங்கீகாரமாகவும் செயல்படுகின்றன.

இரண்டு ஆண்டு கொண்டாட்டங்களில் (ஜூலை 6, 2025  - ஜூலை 6, 2027) இந்தியா முழுவதும் தொடர்ச்சியான நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் இடம்பெறும். இது தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் கல்வி முதல் தொழில்துறை வளர்ச்சி மற்றும் கலாச்சார ராஜதந்திரம் வரை டாக்டர் முகர்ஜியின் பன்முக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும்.

-----

(Release ID: 2143610)

AD/TS/PKV/KPG/KR

 


(Release ID: 2143671)