தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது

Posted On: 03 JUL 2025 4:37PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகமான நிர்வசன் சதனில் தேர்தல் ஆணையம் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது. தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய பிரச்சனைகளைக் கேட்டறிந்தனர். பீகாரில் சுமூகமாக நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

வாக்களிக்க தகுதியான அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கு வசதியாக திட்டமிட்டு பல்வேறு கட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதாக அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் எடுத்துரைத்தது. பீகாரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட  வாக்குச்சாவடி நிலையிலான 1,54,977 முகவர்களின் தீவிர பங்கேற்புடன், வெளிப்படைத் தன்மையோடு இந்த திருத்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் கூடுதலாக வாக்குச்சாவடி நிலையிலான முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் கேட்டுக்கொண்டார்.

வாக்காளர் சேர்ப்புக்கான நடைமுறை மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர் https://voters.eci.gov.in  என்ற தேர்தல் ஆணையத்தின் போர்ட்டலில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நான்காவது கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் 2025 ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்படும். ஐந்தாவது கட்டமாக ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை வாக்காளர் பட்டியல் குறித்து ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம். இது தேர்தல் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும். இதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் 2025 செப்டம்பர் 30 அன்று வெளியிடப்படும். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பீகாரைச் சேர்ந்த தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141818

***

AD/TS/SMB/AG/DL


(Release ID: 2141894)