பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஓய்வூதிய பூசல்கள் குறித்த முதல் தேசிய பயிலரங்கு – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்
Posted On:
02 JUL 2025 5:16PM by PIB Chennai
ஓய்வூதியம் தொடர்பான சட்ட பூசல்களைக் குறைப்பதையும், இந்தியாவின் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப அது தொடர்பான சேவைகளை உறுதி செய்வதையும் இலக்காகக் கொண்டு ஓய்வூதிய சிக்கல்கள் குறித்த தேசிய பயிலரங்கு புதுதில்லியில் இன்று (02.07.2025) நடைபெற்றது. இதற்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊழியர்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தேசப் பணியிலிருந்து ஓய்வு பெறாதவர்களாக உள்ளனர் என்று கூறினார்.
ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள் பெரும்பாலும் விதிகளை தவறாகப் புரிந்துகொள்வதால்தான் எழுகின்றன என அவர் கூறினார். தீர்க்கப்படாத குறைகள் மூத்த குடிமக்களை தேவையற்ற சிரமத்திற்கு ஆளாக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தற்போது, ஓய்வூதியம் தொடர்பான பல்வேறு வழக்குகள் பல்வேறு மன்றங்களில் நிலுவையில் உள்ளன எனவும் கிட்டத்தட்ட 70% வழக்குகள் மத்திய நிர்வாக தீர்ப்பாயங்களில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வழக்கு என்பது பொதுவாக கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் எனவும், முதல் தேர்வாக இருக்க கூடாது என்றும் அவர் கூறினார். பிரச்சினைகளைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சட்டப் பயிற்சி, சட்ட விவகாரத் துறையுடன் வலுவான ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பத்தின் அதிகபட்ச பயன்பாடு ஆகியவை குறித்து பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.
இந்தப் பயிலரங்கில் காணொலி மூலம் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு ஆர். வெங்கடரமணி பங்கேற்றார். ஓய்வூதியதாரர்கள் நலத்துறைச் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ், சட்டத் துறைச் செயலாளர் டாக்டர் அஞ்சு ரதி ராணா, மூத்த அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஓய்வூதியத் துறை பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141569
----
AD/TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2141624)