ஜல்சக்தி அமைச்சகம்
எம்சிஏடி திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு பயன்படுத்தும் நீருக்குக் கட்டணம் விதிக்கப்படும் என்ற ஊடக செய்திகள் தவறானவை
Posted On:
27 JUN 2025 10:32PM by PIB Chennai
மத்திய அரசால் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் ஒரு புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகள் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சில ஊடகங்கள் தவறாகவும் மக்களை குழப்பும் வகையிலும் செய்திகள் வெளியிட்டுள்ளன ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை தூய்மைப்படுத்தும் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.
முன்னோடித் திட்டமான "பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாய் திட்டத்தின் (PMKSY), கீழ் வரக் கூடிய 'கட்டளைப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மையை நவீனமயமாக்குதல்' என்ற (M-CADWM) திட்டத்துடன் தொடர்புடைய அம்சம் குறித்து தற்போது சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளன. இது குறித்து அமைச்சகம் திட்டவட்டமாக தெளிவுபடுத்த விரும்புகிறது. நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்துதல், சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல், பயனுள்ள நீர் மேலாண்மையை ஏற்படுத்துதல், நீர் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக அழுத்தப்பட்ட குழாய் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பொருட்களின் இணைய சாதனங்கள் (IoT), எஸ்சிஏடிஏ அமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், நீர் பயன்பாட்டிற்காக விவசாயிகள் மீது பயன்பாட்டுக் கட்டணங்களை விதிக்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இந்த விஷயம் ஊடகத்தினரால் பலமுறை எழுப்பப்பட்டது. இது குறித்து ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தெளிவுபடுத்தினார்.
மேலும், 'விவசாயம்' மற்றும் 'நீர்' இரண்டும் இந்திய அரசியலமைப்பின் கீழ் மாநிலப் பிரிவுகள் ஆகும். அதன்படி, நீர் பயனர் சங்கங்கள் (WUAs) அல்லது இந்தத் திட்டத்தின் பயனாளிகளிடமிருந்து பயனர் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான எந்தவொரு முடிவும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் அந்தந்த மாநில அரசுகளிடம் மட்டுமே இருக்கும்.
விவசாய சமூகத்தினரிடையே தேவையற்ற பீதி அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளைச் சரிபார்க்குமாறு ஊடகங்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.
வெளிப்படைத்தன்மைக்காகவும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் இந்தத் தெளிவான விளக்கம் வெளியிடப்படுகிறது.
***
(Release ID: 2140317)
VJ/AD/TS/PLM/SG
(Release ID: 2140437)
Visitor Counter : 2