பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

Posted On: 20 JUN 2025 7:20PM by PIB Chennai

ஒடிசா அரசின் ஓராண்டு  நிறைவைக் குறிக்கும் வகையில் புவனேஸ்வரில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார். ஒடிசாவின் முழுமையான வளர்ச்சிக்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, குடிநீர், நீர்ப்பாசனம், விவசாய உள்கட்டமைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புற சாலைகள், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில் பாதை உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை உள்ளடக்கிய ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தும் பதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, ஒடிசாவின் முதன்முதலாக அமைந்த பிஜேபி அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் இந்த ஜூன் 20 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்று குறிப்பிட்டார். "இந்த ஆண்டுவிழா வெறும் அரசின் ஆண்டு நிறைவு மட்டுமல்ல என்றும், பொது சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட நல்லாட்சிக்கான  ஆண்டு நிறைவு" என்றும் பிரதமர் கூறினார். முதலமைச்சர் திரு மோகன் சரண் மஜிக்கும் அவரது அமைச்சரவைக்கும்  பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். அவர்களின் முயற்சிகள் ஒடிசாவின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன என்று குறிப்பிட்டார்.

சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக, நாட்டு மக்கள் முந்தைய ஆட்சியின் நிர்வாக மாதிரியைக் கண்டனர் என்று அவர் கூறினார். அந்த ஆட்சி, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவில்லை என்று பிரதமர் கூறினார். வளர்ச்சித் திட்டங்களின் தாமதம், தடை, போன்றவை ஊழலுக்கு வகை செய்ததாக அவர் விமர்சித்தார். கடந்த பத்தாண்டுகளில், பல மாநிலங்களில் முதல் முறையாக பிஜேபி அரசில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார மாற்றத்தின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

பல ஆண்டுகளாக ஒடிசா மாநிலமும் ஏராளமான சவால்களைச் சந்தித்து வந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், ஏழைகளோ விவசாயிகளோ தங்கள் உரிமைகளைப் பெறவில்லை என்றார். ஒடிசாவில் கடந்த ஒரு வருடமாக, இந்த பிரச்சினைகளைத் தீர்க்க தங்கள் அரசு முழு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி மாதிரி கலவையானது. அது வெளிப்படையான முடிவுகளை வெளிவர வைத்துள்ளது என்று அவர் கூறினார். தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறையின் தாக்கத்தை பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த மாதிரி ஒடிசா மக்களுக்கு இரட்டை நன்மைகளை கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார்.

மத்திய அரசின் பல திட்டங்களிலிருந்து ஒடிசா முன்பு முழுப் பலன்களைப் பெற முடியாத நிலையில் இருந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், தற்போது மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் முழு பலன்களை மக்கள் பெற்று வருகின்றனர் என்பதை அவர் எடுத்துரைத்தார்.  தேர்தல்களின் போது பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தரவாதங்களும் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

வறியவர்களுக்கு அதிகாரம் அளித்ததே அரசின் முக்கிய சாதனை என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், ஒடிசாவில் கணிசமான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர் என்பதை எடுத்துரைத்தார். கடந்த காலங்களில், பழங்குடி சமூகம் பின்தங்கிய நிலையில், வறுமைக்கு ஆளாகி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

2014 க்கு முன்பு, நாடு முழுவதும் 125 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். இந்த மாவட்டங்களில் பெரும்பாலானவை பின்தங்கியவையாக அறிவிக்கப்பட்டு, பின்னர் முந்தைய ஆட்சிகளால் கைவிடப்பட்டவை என்று பிரதமர் குறிப்பிட்டார். சமீபத்திய ஆண்டுகளில், பழங்குடி சமூகத்தை வன்முறைச் சூழலிலிருந்து மீட்டு, புதிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர தமது அரசு பாடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, நக்சலைட் வன்முறையின் வீச்சு தற்போது நாட்டில் 20க்கும் குறைவான மாவட்டங்களாகக் குறைந்துள்ளது என்றார். தொடர்ச்சியான நடவடிக்கைகளின் வேகத்துடன், பழங்குடி சமூகங்கள் விரைவில் வன்முறையின் நிழலில் இருந்து விடுபடும் என்றும், நக்சலைட்வாதம் நாட்டிலிருந்து ஒழிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சிறந்த இலக்குகளை அடைவதற்கு தொலைநோக்கு பார்வை மற்றும் நீண்டகால தொலைநோக்கு பார்வை தேவை என்று பிரதமர் கூறினார். "எங்களது அரசு ஒரு வருட சாதனைகள் அல்லது ஐந்து ஆண்டு இலக்குகளை மட்டும் கொண்டதில்லை என்றும் அடுத்த பல ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் கூறினார்.

ஒவ்வொரு குறிக்கோளையும் அடைய ஒடிசா இளைஞர்கள் தங்களது திறனையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  அனைவரும் இணைந்து ஒடிசாவை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வோம் என்று கூறி  பிரதமர் திரு நரேந்திர மோடி அன்பான வாழ்த்துக்களுடன் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பட்டி, ஒடிசா முதல்வர் திரு மோகன் சரண் மஜி, மத்திய அமைச்சர்கள் திரு ஜுவல் ஓரம், திரு தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

----

(Release ID: 2138107)

AD/TS/PLM/KPG/KR


(Release ID: 2139779) Visitor Counter : 7