சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 11 ஆண்டுகளில் சுரங்கத் துறையில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி

Posted On: 23 JUN 2025 12:39PM by PIB Chennai

வேளாண் உரங்களின் இறக்குமதியைத் தவிர்க்கும் வகையில், கடந்த மாதம், இந்தியா தமது முதலாவது பொட்டாஷ் தொகுதிக்கான ஏலத்தை நடத்தியது. அதன் மூலம் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இதுவே நமது பரந்த அளவிலான கனிம வளத்தின் ஆற்றலாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இத்துறையில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த இலக்கை நோக்கிய முதல் நடவடிக்கை என்பது தனியார் நிறுவனங்களுக்குத் தடையாக இருந்த காலாவதியான கொள்கைகளிலிருந்து இத்துறையை விடுவிப்பதாகும். தற்போது, ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தற்போதுவரை 500-க்கும் மேற்பட்ட கனிம சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் 119 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

2015 மற்றும் 2023-க்கு இடையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், ஒரு துடிப்புமிக்க, உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த சுரங்கத் துறைக்கு அடித்தளமிட்டுள்ளன.

தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை மூலம் அதிக அளவு நிதி, தேசிய புவி அறிவியல் தரவு களஞ்சியத்தில் 12,000-க்கும் மேற்பட்ட புவியியல் அறிக்கைகளை அணுகுதல், ட்ரோன் ஆய்வுகள், நேரடி அணுகல் இல்லா வருமானவரி தாக்கல்கள் அனைத்தும் இந்தத் துறையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, தேசிய முக்கிய கனிம இயக்கம் தொடங்கப்பட்டதன் மூலம், உலகளாவிய முக்கிய கனிம வளப் போட்டியில் இந்தியா ஒரு முக்கியமான இடத்தை வகிக்க முனைந்துள்ளது.

மற்றொரு திருப்புமுனையாக கடந்த 11 ஆண்டுகளில் சுரங்கத் துறையில் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. ஏல முறை மூலம், மாநிலங்கள் ஏல பிரீமியங்கள் மற்றும் ராயல்டி மூலம் சுமார் ரூ.4 லட்சம் கோடி வருவாயைப் பெற்றுள்ளன.

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக திகழும் நாம், மூன்றாவது இடத்தை நோக்கிச் செல்ல தயாராகும் சூழ்நிலையில், ஒரு நவீன, நீடித்த சுரங்க சூழல் அமைப்பு எதிர்காலத் தொழில் துறைக்கு வலிமை அளித்து உலகளாவிய பொருளாதார வரைபடத்தில் இந்தியாவை நிலைநிறுத்தும்.

***

(Release ID: 2138829)
AD/TS/IR/RR/KR

 


(Release ID: 2138908)
Read this release in: English , Urdu , Hindi